சாத்வி பிரக்யாவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டு

சாத்வி பிரக்யாவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டு

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், போபால் தொகுதியில்,  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருவாளர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக சாத்வி பிரஞ்யா தாக்குர்   அறிவிக்கப்பட்டவுடன், மதசார்பற்ற கட்சிகளாக காட்டிக் கொண்டு, மதவாத வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கட்சியின் தலைவர்கள் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்க துவங்கி விட்டார்கள். . 2008 –ம் வருடம்  மலோகன் குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக 9 ஆண்டுகள் விசாரனை என்ற பெயரில் சிறையிலிருந்தவர். தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் மனு செய்த போது, 2013 வரை ஜாமீன் கொடுக்க மறுத்து வந்த  நீதி மன்றம் 2017-ல் ஜாமீனில் அவரை விடுவித்தது. 

        குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதராங்கள் கிடையாது என தேசிய புலனாய்வு அமைப்பும், ஏ.டி.எஸ். என்ற அமைப்பும் நீதி மன்றத்தில் தகவல் தெரிவித்த பின்னரும் கூட ஜாமீனில் விடுவிக்க மறுக்கப்பட்டு, , விசாரனை தொடரும் என கூறியது நீதி மன்றம்.  ஆனாலும் விசாரனையின் போது என்.ஐ.ஏ. மற்றும் ஏ.டி.எஸ். மனுவின் மீது உரிய விசாரனையை நடத்தி தீர்ப்பு அளிக்கப்படும் என்றனர்.  ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போது, ஜாமீனை எதிர்த்து நீதி மன்றத்திற்கு செல்லவில்லை.  தேர்தலில் போட்டியிடுகிறார் என்றவுடன்,  ஜாமீனை  எதிர்த்து குண்டு வெடிப்பில் மரணமடைந்தவரின் தந்தை ,  உச்ச நீதி மன்றத்தில் மேல்  முறையீடு செய்திருப்பதால், தேர்தலில் நிற்பதற்கு தகுதி கிடையாது என்ற விவாதம் கிளம்பியுள்ளது.  வழக்கம் போல் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஊடகங்களும் சாத்வீ பிரஞ்யாவை பாகிஸ்தான் தீவிரவாதி அபீ சைத்துடன் ஒப்பிட்டு பிரச்சாரத்தையும், விவாதத்தையும்  செய்து வருகிறார்கள்.

          நீதி  மன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை கிடையாது. மக்கள் பிரிதிநதி சட்டத்தின் 8-ல் 3 ன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது,  என்பது நன்கு தெரிந்தும், அவரை தடுக்க அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்படுகின்றன.  இந்திய வரலாற்றில், கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் , நீதி மன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் கூட தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர்களாக மாறிய வரலாறு உண்டு.

  1984-ல் இந்திரா காந்தி கொலையுண்டவுடன், டெல்லியில் ஆயிரத்துக்கு அதிகமான சீக்கியர்களை கொன்று குவித்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த மற்றும் முக்கியமான தலைவர்கள்.  பி.யு.சி.எல். என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 227 குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்டது.  அந்த பட்டியலில் 3வது நபராக இருந்தவர் லலித் மக்கான் என்பவர்.  இவர்தான் டெல்லி மாநிலத்திற்கு நடந்த சட்ட மன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர்.   நீதி மன்றத்தின் மூலம் குற்றவாளி என தீர்ப்பு வந்த பின்னரும் கூட, மேல் முறையீடு செய்து விட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும், சிலர் முதல்வராகவும், மற்றும் சிலர் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகித்த போது தெரியாத சட்டம்,  சாத்வீ பிரஞ்யா தாக்குர் மட்டும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என கூச்சல் போடுகிறார்கள்.   

இன்றைய மத்திய பிரதேச முதல்வராக இருக்கும் கமல் நாத், 1984 சீக்கிய கலவரத்தின் போது, ரகாப் கஞ்ச் குருதுவராவில் ஐந்து மணி நேரம் சீக்கியர்கள் மீது தாக்குதல்களை நடத்திய போது, இரண்டு மணி நேரம் அங்கே நின்று காங்கிரஸ் கட்சியினரின் தாக்குதலுக்கு ஆதரவாக இருந்தவர்.  இந்த  குற்றச்சாட்டை முன் வைத்தும் கூட, விசாரனைக்கே கொண்டு வராமல் கமல் நாத்தை காப்பற்றியது காங்கிரஸ் கட்சி.  பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்த போது, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியினரால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  சீக்கிய கலவரத்தில் ஈடுபட்டவர் கமல் நாத் எனவே அவரை பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க கூடாது என்றார்கள்.   சாத்வி மீது இந்து தீவிரவாதம் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கினார்கள்.  அந்த பொய்யான தோற்றத்தை வலுப்படுத்த, தற்போது நடைபெறும் தேர்தலில் இப் பிரச்சினையை எழுப்ப முயலுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மீது நேஷனல் ஹெரால்ட் வழக்கு உள்ளது.  வழக்கிலிருந்து விடுவிக்க இயலாது எனவும், ஜாமீன் வழங்கியது நீதி மன்றம் .  சோனியாவும், ராகுல் காந்தியும் தேர்தலில் நிற்க தகுதி பெற்றவர்களாக மாறும் போது, சாத்வி பிரஞ்யா ஏன் தேர்தலில் போட்டியிடக் கூடாது.

உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் பெற்றவர், கடும் வெப்பம் வீசும் சூழ்நிலையில் தேர்தலில் நிற்கலாமா, உடல் நிலை பாதிக்காதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.  உடல் ஆரோக்கியத்துடனும், சென்னை, டில்லி, கொல்கத்தா, மும்பை என பல நீதி மன்றங்களுக்கு வாதாட போகும் சிதம்பரம், நளினி சிதம்பாரம்,  நீதி மன்றத்தில் ஆஜராவதற்கு பதிலாக 18 முறை ஜாமீன் வாங்கியதை இதுவரை எவரும் கேள்வி கேட்கவில்லை.  உச்ச நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் வழக்குகள் இருக்கும் பொது, ராஜ்ய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்படும் போது, இவர் மேல் உள்ள வழக்குகளை குறிப்பிட்டு எவரும் வாய் திறக்கவில்லை.  பல மனுக்களை தள்ளுபடி செய்த பின்னரும், வழக்கில் வாய்தா வாங்கிக் வரும், கார்த்தி சிதம்பரம் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஒப்புதல் கொடுத்தது ஏன்.  இதைப் பற்றி ஏன் ஊடகங்கள் கேள்விகளை எழுப்ப வில்லை.  சாத்வீ பிரஞ்யா தேர்தலில் போட்டியிடுகிறார் என்றவுடன், ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு விவாதம் செய்வது ஏன் என்பது தெரியவில்லை.  

இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்  ஒமர் அப்துல்லாவும், பிரகாஷ் அம்பேத்காரும் இன்னும் ஒரு படி மேலே சென்று ஆர்.எஸ்.எஸ். மீது பயங்கரவாத அமைப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.   காஷ்மீரில் பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும் ஆதரிக்கும் ஒமர் அப்துல்லா சாத்வியின் மீது குற்றச்சாட்டை சுமத்த தகுதியற்றவர்.  அரசியல் ஷரத்து 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் எழுப்பினால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்தாகிவிடும், காஷ்மீர் தனிநாடாக மாறிவிடும் என ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.   பிரிவினையை முழுமையாக ஆதரிக்கும் ஒமர் அப்துல்லா இரட்டை வேடம் போடுகிறார்.

எனவே சாத்வி தேர்தலில் போட்டியிடுவது தங்களுக்கு பாதகமாக மாறிவிடுமே என்ற அச்சத்தின் வெளிப்பாடே இம் மாதிரியான விளையாட்டுகள்.