சித்திரை விழாவின்போது மதுரையில் பல லட்சம் பேர் திரளுவதால் தேர்தல் தேதியை ஏன் மாற்ற கூடாது?

சித்திரை விழாவின்போது மதுரையில் பல லட்சம் பேர் திரளுவதால் தேர்தல் தேதியை ஏன் மாற்ற கூடாது?

மதுரையில் ஏப்ரல் 18-ம் தேதி பல லட்சம் பேர் பங்கேற்கும் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடப்பதால் அன்றைய தினம் நடக்கும் மக்களவைத் தேர்தலை வேறொரு நாளுக்கு ஏன் மாற்றக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

மதுரையில் 15 லட்சத்து 20,128 வாக்காளர்கள் உள்ளனர். தேனி மாவட்டத்தில் 14 லட்சத்து 59 ஆயிரம், விருதுநகர் மாவட்டத்தில் 15 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்வதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, மதுரையில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றி, வேறொரு நாளில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் திருவிழாவோடு தேர்தலை நடத்துவது எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் ஆணையர் தரப்பில் தேர்தலை நடத்துவது சாத்தியம் என பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆகவே மதுரை மக்களவைத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க இயலுமா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் தகவல் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 14-ம் தேதிக்கு (நாளை) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.