சிறை பிடிக்கப்பட்ட மத்திய அமைச்சர்..!  காரில் வந்து காப்பாற்றிய கவர்னர் ..!

சிறை பிடிக்கப்பட்ட மத்திய அமைச்சர்..! காரில் வந்து காப்பாற்றிய கவர்னர் ..!

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் நேற்று ஒரு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுவதற்காக பின்னணி பாடகரும், மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரியுமான பபுல் சுப்ரியோ அங்கு வந்தார். அவருடன் பா.ஜனதா தலைவரும், சினிமா கலைஞருமான அக்னிமித்ரா பால் என்பவரும் வந்தார்.

பல்கலைக்கழக நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கம் உள்பட 2 இடதுசாரி மாணவர் சங்கங்களை சேர்ந்த மாணவர்கள் பபுல் சுப்ரியோவை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். கருப்பு கொடியை காட்டி ‘திரும்பிப்போ’ என்று கோஷங்களை எழுப்பினர். சுமார் 1½ மணி நேரமாக மத்திய மந்திரியால் உள்ளே செல்ல முடியவில்லை.

தகவல் கிடைத்து பல்கலைக் கழக துணைவேந்தர் சுரஞ்ஜன் தாஸ் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். பாதுகாப்புக்கு வந்த மத்திய ஆயுத போலீசார் சிலராலும் மாணவர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை.

மத்திய மந்திரியை தாக்குவதுபோல மாணவர்கள் வன்முறை செயலில் ஈடுபட்டனர். அதற்கு அவர் என் உடல் மீது கைவைக்காதீர்கள் என எச்சரித்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் பபுல் சுப்ரியோ பல்கலைக்கழகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதும் சில மாணவர்கள் அவரை தள்ளுவதும், பிடித்து இழுப்பதுமாக இருந்தனர். இதனால் ஒரு முறை அவர் கீழே தரையில் விழுந்தார்.

அப்போதும் என்னை தொடாதீர்கள் என அவர் எச்சரித்தார். இந்த இழுபறியில் மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி தரையில் விழுந்தது. இதற்கும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக மத்திய மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

பல்கலைக்கழக வளாகத்தில் பபுல்சுப்ரியோ நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் அரசியல் செய்வதற்காக இங்கு வரவில்லை. நான் இங்கு ஒரு பாடகராகத்தான் வந்துள்ளேன். ஆனால் சில மாணவர்கள் என்னிடம் நடந்து கொண்ட முறையால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். காருக்குள் இருந்த என்னை முடியை பிடித்து இழுத்தனர், தள்ளிவிட்டனர். மாணவர்களின் இந்த போராட்டம் முற்றிலும் வருந்தத்தக்கது.

தூண்டிவிடப்பட்ட மாணவர்களுக்கும், கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. என்னை துன்புறுத்திய மாணவர்கள் தங்களை நக்சலைட்டுகள் என்று கூறிக்கொண்டனர்.

இவ்வாறு பபுல் சுப்ரியோ கூறினார்.

பின்னர் கருத்தரங்கில் பேசிவிட்டு மாலை 5 மணி அளவில் பபுல் சுப்ரியோ காரில் புறப்பட்டார். அப்போதும் போராட்ட மாணவர்கள் அவரது காருக்கு வழிவிடாமல் முற்றுகையிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி சிறைபிடித்தனர். இதுபற்றி கவர்னர் ஜெக்தீப் தாங்கருக்கு தகவல் கிடைத்ததும் அவர் தலைமை செயலாளரை தொலைபேசியில் அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டு செல்லும் முன்பு கவர்னர் நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய மந்திரியை முற்றுகையிட்டது மிகவும் தீவிரமான விஷயம். இது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின் பாதகமான பிரதிபலிப்பை காட்டுகிறது” என்றார்.

பின்னர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற கவர்னர் மத்திய மந்திரியின் கார் அருகில் சென்றார். அவரையும் மாணவர்கள் தடுத்து உங்கள் காருக்குள் உட்காருங்கள் என்றனர். பின்னர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் உதவியுடன் கவர்னர் மத்திய மந்திரி பபுல் சுப்ரியோவை இரவு 7 மணி அளவில் தனது காரில் ஏற்றி அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவத்தால் துணைவேந்தர் சுரஞ்ஜன் தாஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.