சில வரிகளில் சில செய்திகள் (01.01.2019)

சில வரிகளில் சில செய்திகள் (01.01.2019)

* திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சியுடனும் ஆஇஅதிமுக கூட்டணி அமைக்காது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

*தெலுங்கானா மாநிலத்தில் புதிய உயர்நீதிமன்றம் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. அதன் முதல் தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

*யூகோ வங்கி, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்ட்ரா ஆகிய பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன உதவியாக ரூ.10,882 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

*தமிழகத்தில் ஒரே ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், போலீஸாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினர்.

*தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழக துணை வேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*அரியலூர் மாவட்டம் வளத்தான் குளத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது.

* பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கத்தார் நாடு அந்த அமைப்பிற்கு அனுப்பியுள்ளது.

*வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மறுநாள் பதவியேற்று கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2019 அரசு வேலை வாய்ப்பை இலக்காக கொண்டுள்ளவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்துள்ளன. இந்த மாதம் குரூப் 1, மே மாதத்தில்  குரூப் 2, ஜூன் மாதத்தில் குரூப் 4 ஆகிய பணிகளுக்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

*சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டிக் டாக் செயலிக்கு அடிமையாகி வருகிறார்கள். இது ஆபத்தானது. எனவே, டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.