சில வரிகளில் சில செய்திகள் (12.12.2018) -  காலை

சில வரிகளில் சில செய்திகள் (12.12.2018) - காலை

* 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் 114தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் சுயேச்சைகளின் உதவியோடு ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

* 5 மாநில தேர்தல் முடிவுகள்  குறித்து பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், வெற்றியும்  தோல்வியும் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் கூறியுள்ளார்.

*மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர்கள் கமல்நாத், திக் விஜய் சிங், மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடையே முதல்வர் பதவிக்கு  கடும் போட்டி நிலவி வருகிறது.

* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் ஆயுஷ் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

* காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசின் முடிவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

* விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்றங்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருமதி.விஜயா கமலேஷ் தஹில்ரமானி திறந்து வைத்தார்.

* உள்ளாட்சி  தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலர் வரும் 18ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

*கிங் பிஷர் நிறுவன தலைவரும், வங்கிகளுக்கு கடன் பாக்கியை திரும்ப செலுத்தாமல் லண்டனில் வாழ்ந்து வருபவருமான தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவரும் நடவடிக்கைக்கு பாரத ஸ்டேட் வங்கி வரவேற்பு தெரிவித்துள்ளது.

* ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக திரு.சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

* வங்கக்கடலின் தென் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.