சில வரிகளில் சில செய்திகள் (13.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (13.12.2018)

* வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, கடலூர், பாம்பன், சென்னை எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

*மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் வரும் 20ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  அதே போல் அமைச்சர் விஜய பாஸ்கர், மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் வரும் 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சி பணிகளில் 740 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

*பசுமை தீர்ப்பாயத்தின் உத்திரவுப்படி தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக வழங்கிட வேண்டும்.20 எம்.ஜி.டி குடிநீர் வழங்கும் ஆணையை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

* அ.ம.மு.க விலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் .அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன் 'ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுயநலத்திற்காக விலகிச்செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பார்களேயானால் அது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைப்பது போன்றது.' என்று கூறியுள்ளார்.
 

*அமெரிக்காவில் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் டெலவர், பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சியை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

*நாமக்கல் மாவட்டம் ஒருவத்தூர் புதூர் மாநகராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை பள்ளியிலேயே முடித்து விட்டு புத்தக பைகளை பள்ளியிலேயே வைத்து விட்டு செல்லும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், குழந்தைகள் புத்தக மூட்டை சுமக்க வேண்டிய அவசியமில்லாததால், குழந்தைகளும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

*2018ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமையை 'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் நாயகி பிரயா வாரியர் பெற்றுள்ளார். இவர் கண்ணடிக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

*புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில்  இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் இந்தியா நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.