சில வரிகளில் சில செய்திகள் (21.12.2018)

சில வரிகளில் சில செய்திகள் (21.12.2018)

*நாட்டில் இருக்கும் எந்த கணினியையும் வேவு பார்க்கும் நடைமுறைக்கு உள்துறை அமைச்சகம் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உளவுத்துறை, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரித்துறை, ரெவின்யூ இன்டலிஜென்ஸ் இயக்ககம், என்.ஐ.ஏ, வடகிழக்கு, அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் இருக்கும் சிக்னல் இன்டலிஜென்ஸ் இயக்ககம், ரா அமைப்பு மற்றும் தில்லி போலீஸ் கமிஷ்னர் ஆகியோர் எந்த கணினியையும் வேவு பார்க்க முடியும்.

* எதிர்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற செயல்பாடுகள் இன்றும் முடங்கின. மக்களவை இன்று முழுமைக்கும் மாநிலங்களைவை மதியம் 2.30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டன. 

*பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 73. சாகித்திய அகெதமி  விருது, இலக்கிய சிந்தனை விருது ஆகிய விருதுகளை பெற்றவர் பிரபஞ்சன்.

*குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். எல்லை தாண்டிய பயங்கரவாதம், இளைஞர்களை தீவிரவாதத்திற்கு திருப்பி விடுவதை தடுப்பது ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

*அகஸ்தா வெஸ்ட்லாண்ட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடை தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் திகார் சிறையில் தனி அறை கோரி தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

* குஜராத் மாநிலத்தில் சொராப்புதீன் என்கவுண்டர் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

* காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இயலாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

*திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்களின் கண்காட்சியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூரில் துவங்கி வைத்தார்.இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.

* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாததற்கு திமுக தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

*மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்புக்கட்டண ரயில் அடுத்த மாதம் 2,9,16,23 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

*டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாட்ஸ்மேன்களில் இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

*சர்வதேச பாட்மிட்டன் போட்டிகளில் தரவரிசையில் மகளீர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

*இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபள்யூ.வி.ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

*ப்ரோ கபடி லீக் போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் தமிழகம் - பெங்கால் அணிகளும் பூனே - தெலுங்கு அணிகளும் மோதுகின்றன.

* தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும், தென் தமிழக பகுதிகளில் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.