"சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்"

"சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்"

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, சிவகாசியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பட்டாசுத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தக் கூடாது; பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் கடந்த 100 நாள்களாக மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மூடப்பட்ட பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். வேலை இழந்த பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் ஞானசேகரன் (காங்.), திலகபாமா (பாமக), செய்யது ஜஹாங்கீர் (இந்திய தேசிய லீக்), வெங்கட்ராமன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.இப்போராட்டம் புதன்கிழமை நிறைவு பெறும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.