சீமான் பார்வையில் தமிழ் கடவுளை அணுகும் சுகி சிவத்தின் ஆதாரமற்ற அபத்தங்கள்!! சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் விளாசல்!!

சீமான் பார்வையில் தமிழ் கடவுளை அணுகும் சுகி சிவத்தின் ஆதாரமற்ற அபத்தங்கள்!! சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் விளாசல்!!

“முருகனும் சுப்பிரமணியரும் ஒன்றா வேறுவேறா” என்ற தலைப்பில் பிரபல சொற்பொழிவாளர் சுகி சிவம் சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களைத் தெரிவித்த வீடியோ சில நாட்கள் முன்பு வெளியானது.

அதற்கு அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பதிவில் கீழ்க்காணும் சிறப்பான எதிர்வினையை எழுதியிருந்தார்.

சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெயர். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் சமுதாயம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஆன்மிக பேச்சாளர்களாக இருக்கிற உன்மத்த நிலைக்கு தமிழ்சாதி தள்ளப்பட்டிருக்கிறது.

திருமால் வேதத்தில் இல்லை. விஷ்ணு என்பது பின்னால் வந்தது என்கிறார் சுகி.சிவம் அவர்கள். இது முழுக்க முழுக்க தவறு. விஷ்ணு மூவடியால் உலகளந்தது ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது. வேத இலக்கியங்களில் பகுதியான பிராமணங்களில் விஷ்ணுவே வேள்வியாக கருதப்படுகிறார். இவற்றை சங்க இலக்கியங்களிலும் காண முடியும். வேத வேள்வியே விஷ்ணுவின் வெளிப்பாடு என்பது பரிபாடல். ஆக வேதமும் தெரியாது பரிபாடலும் தெரியாது என்று பாண்டவர்கள் கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரல்களை காட்டியிருக்க வேண்டாம் திரு.சுகி.சிவம்.

‘சாமி உன்னுது பூசை என்னுது’ என்று கூட்டணி வைத்தார்கள் என்று வேறு கொச்சைப்படுத்துகிறார் இந்து சமயத்தை. வேத சமயத்திலும் சரி அதன் பன்மை வளர்ச்சியிலும் சரி பூசகர் முறைகள் வேற்றுமை உடையவை. மிக அண்மை காலங்கள் வரை விலங்கு பலியிடுதல் நம் பெரும் கோவில்களில் இருந்ததும் அதனை அருட்பிரகாச வள்ளலார் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் வரை எதிர்த்து பல கோவில்களில் இல்லாமல் ஆக்கியதும் வரலாறு. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் இந்த பன்மை சிறப்பை கொண்டாடுகிறார்.