சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரச குழு

சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரச குழு

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நியமித்தது. ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். குழுவில் இடம் பெற்றுள்ள மூவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அயோத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்துதான் மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சக மத்தியஸ்தர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். உதவிகள் தேவைப்பட்டால் உச்சநீதிமன்ற பதிவாளரை மத்தியஸ்தர்கள் அணுகலாம்.

மத்தியஸ்தர் குழு நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ரகசியம் காக்கப்பட வேண்டும். மத்தியஸ்தர்களும், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களும், பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதை வெளியே தெரிவிக்கக் கூடாது. மத்தியஸ்தர் குழு மூலம் சிறப்பான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.