சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை.

சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினாலும் சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இது அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் புயலாகவும், அதற்கடுத்த இருப்பதி நான்கு மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறி வரும் திங்கட்கிழமை மதியம் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியதை நினைத்து ஒருவகையில் நிம்மதியடைந்தாலும், மழையை எதிர்பார்த்து கார்த்திருந்த சென்னைவாசிகளுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.

எனினும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் திசை போகப்போக தான் தெரியும் என்ற வானிலை மையத்தின் கணிப்பு சென்னைவாசிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.