ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்குத் தடை - மத்திய அரசு தீர்ப்பாயம்

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்குத் தடை - மத்திய அரசு தீர்ப்பாயம்

ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஜம்மு காஷ்மீர் (ஜேஇஎல்-ஜே.கே), ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி-யாசீன் மாலிக் பிரிவு (ஜேகேஎல்எஃப்-ஒய்) ஆகிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆய்வு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி சந்தரசேகர் தலைமையில் தனித் தீர்ப்பாயத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த தீர்ப்பாயம், ஜேஇஎல் (ஜே-கே), ஜேகேஎல்எஃப்-ஒய் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் சரியானவையா என்பது குறித்தும், தடை உத்தரவு குறித்தும் முழுமையான ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்ப்பினை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.  

முன்னதாக, ஜேஇஎல் (ஜே-கே), ஜேகேஎல்எஃப்-ஒய் ஆகிய அமைப்புகள் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகவும், இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. பயங்கரவாதிகளுக்கு அரணாக இருந்து பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீஸாரிடம் இருந்து அவர்களை காப்பாற்றி வருவதாலும், பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாலும் இந்த அமைப்புகளை தடை செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.