ஜெயலலிதாவின் சொத்துக்கள் விவரம் என்ன?

ஜெயலலிதாவின் சொத்துக்கள் விவரம் என்ன?

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர் வசம் உள்ளது என்றும் அவற்றை மீட்டு முறையாக நிர்வகிக்க வேண்டும்  என்று தென்சென்னை மாவட்ட ஜெ.பேரவை துணைச்செயலர் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குந்தூஸ் ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவின் சொத்துக்கள், கடன்கள் ஆகியவற்றின் உண்மை மதிப்பை அறியும் பொருட்டு ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை வழக்கில் இணைத்தனர். 

மேலும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, ஆகிய துறையினர் தான் உண்மையான விவரங்களை அளிக்க முடியும் என்பதால் அந்த துறைகளும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு அவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களின் உண்மையான மதிப்பை ஆராய்ந்து தெரிவிக்கவேண்டும் என்று உத்திரவிட்டனர். 

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற கருத்து கேட்டு வருவதால்  தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துரையின் செயலரையும் இந்த வழக்கில் சேர்த்து நீதிபதிகள் உத்திரவிட்டுள்ளனர்.