ஜெயலலிதாவின்   ரூ.913 கோடி சொத்து என்னாச்சு?

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்து என்னாச்சு?

ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பராமரிப்பு தொடர்பான அப்பீல் மனுவை விசாரித்த ஐகோர்ட், பதிலளிக்குமாறு அவரது சகோதரரின் வாரிசுகளான தீபக், தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சென்னை அம்மா பேரவை நிர்வாகிகளான வக்கீல்கள் புகழேந்தியும் ஜானகிராமனும், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது--:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உட்பட இந்தியாவின் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களைப் பாதுகாத்திட அவருக்கு நேரிடையான வாரிசு கிடையாது. அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா மட்டுமே உள்ளனர். ஜெ.வின்சொத்துக்களை மூன்றாம் நபர்கள் அபகரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு ரூ.41 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், தனக்கு நேரிடையான வாரிசு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் கோர்ட் 2014ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், 1996ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவருக்கு ரூ.200 கோடி வரை சொத்துக்கள் இருந்ததாகவும், அதன் தற்போதைய மதிப்பு ரூ.913 கோடி வரை இருக்கும் என்றும் மதிப்பிட்டிருந்தது. இந்த தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

ஜெ., மறைவுக்கு பின்னர், அவரது சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை; பாதுகாக்கப்படவும் இல்லை.
எனவே, ஜெ.வின் அசையும், அசையா சொத்துக்களைப் பாதுகாத்து பராமரிக்க நிர்வாக அதிகாரியை நியமித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் முறையிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து, புகழேந்தியும் ஜானகிராமனும் தாக்கல் செய்த அப்பீல் மனு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஷ் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு வரும் 28ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, தீபக், தீபா, தமிழ்நாடு சொத்துக்கள் பாதுகாப்பு நிர்வாகத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.