ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவிக்கள் அகற்றப்பட்ட விவகாரம்  அப்பல்லோவுக்கு நெருக்கடி!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவிக்கள் அகற்றப்பட்ட விவகாரம் அப்பல்லோவுக்கு நெருக்கடி!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் நேற்று வாக்குமூலம் அளித்த உளவுத்தறை ஐஜி சத்தியமூர்த்தி, ‘ஜெயலலிதா  சிகிச்சை பெற்றபோது, அப்பல்லோவில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் உத்தரவிடவில்லை. தவறாகக் குற்றம்சாட்டியுள்ள அப்பல்லோ மீது ஒரு மாதத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று அதிரடித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், ஜெயலலிதா  சிகிச்சையின் போது அப்பல்லோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன்படி அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘ஜெயலலிதா சிகிச்சை கால சிசிடிவி பதிவுகள் எதுவும் எங்களிடம் இல்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த போது, உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உத்தரவுப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன’ என்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து விசாரிக்க, ஐஜி சத்தியமூர்த்திக்கு கமிஷன் சம்மன் அனுப்பியிருந்தது. 

இதன்படி நேற்று அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்த போது, ‘அப்பல்லோவில் ஜெயலலிதா  சிகிச்சை பெற்றுவந்த போது, சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் உத்தரவிடவில்லை. அப்பல்லோ நிர்வாகம் தவறான தகவலைத் தெரிவித்துள்ளது’ என்று திட்டவட்டமாக மறுத்தார். அப்பல்லோ தரப்பு வக்கீல் குறுக்குவிசாரணை நடத்தியபோதும், இதே வகையில் மறுத்தார். அப்போது நீதிபதி ஆறுமுகசாமி குறுக்கிட்டு, ‘‘அப்படியென்றால், அப்பல்லோ மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உங்களுக்கு எண்ணம் உள்ளதா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சத்தியமூர்த்தி, ‘‘நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். என் மீது பணிரீதியான தவறான குற்றச்சாட்டு வந்துள்ளதால், உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். நிச்சயமாக ஒரு மாதத்துக்குள் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

 ஜெயலலிதா மரணம் தொடர்பாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை கமிஷனில் நேற்று முன்தினம் சுட்டிக்காட்டிய சசிகலா தரப்பு வக்கீல், ‘சன் டிவியிடம் உள்ள ஆவணங்களை சன் குழும தலைவர் கலாநிதியிடம் இருந்து பெற வேண்டும்’ என்று மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, இதுகுறித்து நவ.20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கலாநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.