டிசம்பர் 4 முதல் ‘ஸ்டிரைக்’ அரசு ஊழியர் – ஆசிரியர் போர்க்கொடி

டிசம்பர் 4 முதல் ‘ஸ்டிரைக்’ அரசு ஊழியர் – ஆசிரியர் போர்க்கொடி

சம்பள முரண்பாடுகள் நீக்கம், பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அளித்த தகவல்:

2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சம்பள முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என, தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் வரவில்லை. இதனால், இவற்றை நிறைவேற்றக் கோரி டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். இந்த முடிவு, சென்னையில் நவ.16ம் தேதி நடந்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், போராட்ட ஆயத்த ஏற்பாடுகள் குறித்தும் அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, எல்லா மாவட்டங்களிலும் நவ.19, 20 தேதிகளில் போராட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்கள்; நவ.25ல் வேலை நிறுத்த மாநாடுகள்; நவ.26 முதல் நவ.29 வரை பிரச்சார இயக்கம் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும், நவ.30ம் தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

எங்களுக்கு, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. கோரிக்கைகள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவதால்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால், அதில் பங்கேற்கத் தயாராக இருக்கிறோம். அந்த பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வுகள் ஏற்பட்டால், போராட்டம் கைவிடப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.