டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு

ஏற்கனவே பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள சர்கார் பட விவகாரத்தில், இன்னொரு பரபரப்பு வந்திருக்கிறது. படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும், ஏழை மக்களை முன்னேற்ற பல பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தினர். இப்போதும் பல இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன. மேலும், ஒன்றரை கோடி பேருக்கு இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால், தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் இலவசப் பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழக மக்கள் பயன்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர்களால் வழங்கப்பட்ட பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவது போன்ற காட்சிகளை படமெடுத்து வெளியிட்டிருப்பது, தமிழக அரசை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

 மேலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதி்க்கும் வகையிலும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சர்கார் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுக்கு எதிராக வன்முறையைத் துாண்டும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.
 எனவே, இதை இயக்கிய டைரக்டர் ஏ.ஆர். முருகதாசை தேசத்துரோகியாகவே கருத வேண்டும். திரைப்படம் மூலம் அரசுக்கு எதிரான குற்றங்களைத் துாண்டியிருப்பதால், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.