தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?...சர்வேசா!

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?...சர்வேசா!

45 ஆண்டுகள் போராட்டத்தால் தியாகி மனைவிக்கு பென்ஷன்!


சுதந்திரப்போராட்ட காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போராடிய தியாகி லட்சுமணத்தேவர். இவரை, பிரிட்டிஷ் இந்திய அரசு 1945 ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. மலேசியாவில் இருந்த சித்ரா முகாம் சிறையி்ல் அடைக்கப்பட்ட இவர், 1946 பிப்ரவரி 28ம் தேதி விடுதலை செய்யப்பட்டபின் இந்தியா திரும்பினார்.

லட்சுமணத்தேவர் 1969ல் மரணமடைந்தபின், தியாகி குடும்ப ஓய்வூதியம் கோரி, அவரது மனைவி காத்தாயி அம்மாள், தமிழக அரசுக்கு மனு அளித்தார். ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசு 1970 மார்ச் 28ம் தேதி உத்தரவிட்டது.

காத்தாயி அம்மாள், தியாகி குடும்பங்களுக்கான மத்திய அரசின் ஓய்வூதியம் கோரி, மத்திய அரசுக்கு 1973 செப்டம்பரில் மனு அனுப்பினார். அந்த காலகட்டத்தில் இருந்த மத்திய அரசுகள், இந்த மனுவைக் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து, ஐகோர்ட்டில் காத்தாயி அம்மாள் 2003ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

ஐகோர்ட்டிலும், இந்த வழக்கு பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்தது. ஒருவழியாக, இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. ‘காத்தாயி அம்மாளுக்கு, 1973 செப்டம்பர் 25ம் தேதி முதல் இப்போது வரையிலான தியாகி குடும்ப ஓய்வூதியத்தொகையை 6 சதவீத வட்டியுடன் 2 மாதங்களுக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், அவரது மனுவைப் பரிசீலிக்காமல் காலம்தாழ்த்தியதால், மத்திய அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையையும் காத்தாயி அம்மாளுக்கு வழங்க வேண்டும்’ என்று, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தீர்ப்பளித்துள்ளார். காத்தாயி அம்மாள் மனு அளித்து 45 ஆண்டுகளுக்குப் பின், தியாகி குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது!