தமிழகம் என்றும் ஆன்மிகபூமி,  திமுக இன்றும் ஹிந்து விரோதிதான்

தமிழகம் என்றும் ஆன்மிகபூமி, திமுக இன்றும் ஹிந்து விரோதிதான்

பரபரப்பான உச்சகட்ட பிரச்சாரத்திற்கு மத்தியில் தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னால் மாநில தலைவருமான இல.கணேசன் தமிழக தேர்தல் நிலவரம் குறித்து தினமணி நாளிதலுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி நமது வாசகர்களுக்காக...

 

ஜெயலலிதா இல்லாத அதிமுக ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

       அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் மரணம் எதிர்பாராதது என்பதால், தனக்குப் பின்பு கட்சியை வழி நடத்தும் ஆளுமையை சுட்டிக்காட்ட முடியாமல் போனது. இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி உடைபடாமல், துணை முதல்வர் .பன்னீர்செல்வத்தையும் இணைத்து, சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். கடந்த சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி புரிவதற்காக மக்கள் தந்த தீர்ப்பு 5 ஆண்டு காலம். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும்.


 திமுக இந்துக்களுக்கு விரோதி அல்ல என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறாரே...

     அவர் இந்து மத கடவுள்கள் பற்றியும், இந்துத் திருமணச் சடங்குகள் பற்றியும் கூறிய கருத்துகள் இந்துக்களின் மன உணர்வுகளை மிகவும் பாதித்திருப்பதைப் பார்த்து ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடுதான் அவருடைய இந்த பேச்சு. தி.. தலைவர் வீரமணியின் விமர்சனங்களைத் துணிந்து மறுப்பதற்கு அவர் தயாராக இல்லை என்பதிலிருந்து அவரது உதட்டளவு இந்துப் பற்று தெரிகிறது. திமுக இந்துக்களுக்கு விரோதி அல்ல என்று ஸ்டாலின் கூறுவதிலிருந்தே, இந்துக்கள் திமுகவை விரோதியாகப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதைதான் இது.

 

 ரஃபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு எழுப்பிய முதல் கட்ட ஆட்சேபங்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது, தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு பின்னடைவாக அமையுமா?

      பின்னடைவெல்லாம் கிடையாது. திருட்டுத்தனமாக ஆவணத்தைப் படமெடுத்து அதை வெளியிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இவர்கள் புதிதாக சில ஆவணங்களை தந்திருப்பதால், அதனடிப்படையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். நாங்கள் விசாரணைக்குத் தயார், மடியில் கனம் இல்லாதவர்களுக்கு வழியில் பயம் இல்லை.

 

 ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு...

      ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அதற்கு அனுமதியளித்து கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அந்த ஆலைக்கு அனுமதியளித்தபோது, திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருந்திருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டபோது, அந்தத் துறை அமைச்சராக மு..ஸ்டாலின் இருந்திருக்கிறார். இதில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் திட்டமிட்டே ஸ்டெர்லைட் விவகாரத்தில் எங்களை இழுக்கிறார்கள். பிரச்சனையை திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

 

 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததைப் பற்றி பேசி வரும் பாஜக தனது 5 ஆண்டுகால சாதனையைப் பற்றி எதுவும் பேசுவதில்லையே, ஏன்?

      அது தவறு. 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் புல்வாமா சம்பவத்துக்கு பதில் தாக்குதல் நடத்தியதைப் பற்றிப் பேசவில்லை. ராணுவ வீரர்களுக்கு பாராட்டுத்தான் தெரிவித்தோம். தீவிர வாதத்தை வேரறுக்கவும், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்று சொல்கிறோம். அதில் தவறு என்ன இருக்கிறது?

 

 இது பெரியார் பிறந்த மண். நாத்திக வாதம் தழைக்கும் மண். இங்கே ஆன்மீகம் பரப்பும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறதே, என்ன நினைக்கிறீர்கள்?

      ஒரு காலத்தில் கருப்பு என்று சொன்னால் நாத்திகவாதத்தையும், சிவப்பு என்று சொன்னால் பிரிவினைவாதத்தையும் குறிக்கும். ஆனால் இப்போது கருப்பு என்று சொன்னால் ஐயப்ப சாமியையும், சிவப்பு என்றால் ஆதிபராசக்தியையும் குறிக்கும் என்று மாறிவிட்டதே. தமிழகம் என்றைக்குமே ஆன்மீக பூமியாகத் தான் இருந்து வந்திருக்கிறது. பெரியார், பெரியார் என்று இவர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழக மக்கள் பெரியாரையோ, அவரது கொள்கைகளையோ என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. பெரியாரின் நாத்திகவாதக் கொள்கைகள் வெற்றி பெற்றிருந்தால் இன்று கோயில்கள், பாழடைந்திருக்க வேண்டும். நாங்கள் இந்துக்களின் எதிரியல்ல என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், நாத்திகவாதம் எடுபடவில்லை என்று தானே பொருள். பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்பது பயத்தின் வெளிப்பாடு என்று தான் நான் கருதுகிறேன்.