தமிழக நகரங்களில் அதிகரித்து வரும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

தமிழக நகரங்களில் அதிகரித்து வரும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். லேசான, தளர்வான மற்றும் வெளிர்நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி, குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாட்டில்களை அவசியம் கொண்டு செல்ல வேண்டும்.

கோடைக்காலங்களில் உடலில் ஏற்படக் கூடிய நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு - சர்க்கரை கரைசல், இளநீர், வீட்டுமுறை பானங்களான லஸ்ஸி, அரிசி கஞ்சி, எலுமிச்சை சாறு, மோர் போன்ற பானங்களை பருகவும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ வெளியேறுவது, உடலில் நீர்ச் சத்து குறைவதைக் குறிக்கும். எனவே, தேவையான முதலுதவி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

வீடுகளை குளுமையாக வைத்துக்கொள்ள ஏதுவாக ஜன்னல்களை இரவு நேரங்களில் திறந்து வைக்க வேண்டும். உடலை குளுமையாக வைத்துக்கொள்ள மின்விசிறி, ஈரமான துணி பயன்படுத்துதல், குளிர்ச்சியான நீரில் குளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். பணிபுரியும் இடங்களில் பருக குளிர்ந்த நீரை பயன்படுத்தவும். கடுமையான பணிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் மேற்கொள்ளவும்.

பகல் நேரங்களில் குறிப்பாக பிற்பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் உணவு சமைப்பதை தவிர்க்கவும். மேலும், சமையல் செய்யும்போது காற்றோட்டம் நன்கு அமையும் வண்ணம் கதவுகளை திறந்து வைக்கவும். தேநீர், காபி மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். அதனால் மேற்படி பானங்கள் அருந்துவதையும் புரதச்சத்துள்ள நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.