தமிழர்கள் நாம் தமிழ் சொன்னபடி வாக்களிப்போம்

தமிழர்கள் நாம் தமிழ் சொன்னபடி வாக்களிப்போம்

வாழ்க தமிழ் கோஷம் வேண்டாம் 
தமிழ் சொன்னபடி வாக்களிப்போம் .

*யாரை தேர்வு செய்யணும்?*

தேசப் பணிக்கு, பொது வாழ்வுக்கு வருபவர்களுக்கு 4 குணங்கள் அவசியம் என்கிறார் திருவள்ளுவர்.

‘அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.’

என்பதுதான் அந்த 4 குணங்களும். அதாவது, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முன்வருபவருக்கு முதலில் பேரன்பு வேண்டும். அன்பு இல்லாவிட்டால் அடுத்தவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பே வராது.

 அதனால் அன்பை முதல் தகுதியாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அன்பு இருந்தால் மட்டும் போதாது. அன்பு காரணமாக ஒருவர் செய்ய நினைக்கும் செயலை செய்து முடிக்க அறிவு வேண்டும். அடுத்ததாக செய்ய நினைத்த செயலை அறிவார்ந்த வழியில் ஆராய்ந்து செயல்படுத்துவது தொடர்பாக துணிந்து முடிவெடுக்கும் தன்மை வேண்டும்.

 முடிவெடுத்ததை செயல்படுத்தும்போது அந்த செயலில் தனிப்பட்ட விருப்பம், ஆசை இல்லாதவராக அவர் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அந்த செயலில் தவறு, முறைகேடு இருக்காது.

அன்பு, நல்ல அறிவு, முடிவெடுக்கும் திறன், தனிப்பட்ட ஆசை இல்லாமை ஆகிய 4 குணங்கள் கொண்டவர்களை பொதுவாழ்வில் தேர்வு செய்யும்போது மக்கள் மிகுந்த நலனை அடைவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

அப்படியில்லாமல் தனக்கு பிடித்தமானவர், அறிமுகமானவர், தனக்கானவர் என தனிப்பட்ட காரணங்களால் தகுதியில்லாதவரை தேர்ந்தெடுத்தால் என்னவாகும் என்பதை...

‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.’

மக்களுக்கு நன்மை செய்தற்குரிய திறமையும், அறிவும் இல்லாதாரை அன்பு காரணமாகத் தேர்ந்தெடுப்பின் அத்தேர்வு அறிவின்மை இல்லாமையால் விளையும் அத்தனை துன்பங்களையும் கொடுக்கும் என்கிறார்.

ஏப்ரல் 18ல் இந்த தேசத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் ஆட்சியாளர்களை, நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் நடக்கிறது. அதில் பொறுப்புள்ள வாக்காளனாய் நாம் எப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அதில் தவறினால் என்னவாகும் என்பதையும் வள்ளுவர் சொல்லிவிட்டார். செயல்படுத்துவது நமது கடமை.