தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு - மூவருக்கு விடுதலை

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு - மூவருக்கு விடுதலை

கடந்த 2000ம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 'ப்ளசன்ட் ஸ்டே' ஹோட்டல் வழக்கில் குற்றவாளியென தீர்ப்பு வந்ததும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டிக்கு கல்வி சுற்றுலா வந்த கோவை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் வந்த பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகில வாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் எரிந்து இறந்தனர். 


இந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது. பின்னர், மேல் முறையீட்டில் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு விரும்பி அதில் இந்த 3 பேரையும் விடுவிக்க ஆளுநரின் அனுமதியை கோரியது.

இந்த மூன்று பேரையும் விடுவிக்க ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே, வேலூர் சிறையிலிருக்கும் இவர்கள் மூவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.