தற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன் உரிமை உண்டு!

தற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன் உரிமை உண்டு!

தற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன்கள் பெற உரிமை உண்டு என்று ஐகோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி உதவி அலுவலர் அலுவலகத்தில், சந்திரா என்பவர் தற்காலிகத் துப்புரவு தொழிலாளியாக, மாதம் 60 ரூபாய் ஊதியத்தில், கடந்த 1983-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு, பணிக்கான பண பலன்கள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து திருவண்ணாமலை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் சந்திரா வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பணப்பலனாக ரூ.90 ஆயிரத்து 117 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கல்வித்துறை தாக்கல் செய்த அப்பீல் மனுவில், ‘தற்காலிகப் பணியாளர்கள்,  பணப்பலன்கள் கோர உரிமையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, ‘தற்காலிகப் பணியாளருக்கும் பணப்பலன் பெற உரிமை உண்டு’ என்று தெளிவுபடுத்தி, ‘கல்வித்துறை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவு உறுதிசெய்யப்படுகிறது. மனுதாரர் சந்திராவுக்கு, பணப்பலனாக 90 ஆயிரத்து 117 ரூபாயை 8 வாரங்களுக்குள் கல்வித்துறை வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.