தலைமுறையை புரிந்துக்கொள்ள தவறியது தான் தேக்கநிலைக்கு காரணமா ?

தலைமுறையை புரிந்துக்கொள்ள தவறியது தான் தேக்கநிலைக்கு காரணமா ?

இன்றைக்கு நாட்டில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளதற்கு என்ன காரணம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை அளித்து வருகிறார்கள். உலகளவில் உள்ள பாதிப்பு,  GST, Ola , Uber, வங்கிக்கடன் பிரச்சனை, போட்டி நிறுவனங்கள், அதிக உற்பத்தி, பொருளின் தரம், பேராசை என்று இரண்டு டஜன் காரணங்களை கூறுகிறார்கள். எனது பார்வையில் ஒரு காரணம் தென்படுகிறது.


இந்த கால தலைமுறையை புரிந்துக்கொள்ள தவறியதே, தேக்கநிலைக்கு காரணம் என்று தோன்றுகிறது 

1970கள் வரை பிறந்தவர்கள் பணத்திற்கு அதிக மரியாதை அளித்து வந்தார்கள். தேவையற்ற ஒரு பொருளை கூட வாங்கியதில்லை, கிடைக்கும் பணத்தை சேமித்தார்கள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று வாழ்ந்தார்கள். ஒரு டீவி வாங்க வேண்டுமென்றால் கூட, 1 மாதம் யோசித்து, பின்னர் 6 மாதங்கள் சேமித்து வாங்கினார்கள். அவசர நேரங்கள் தவிர்த்து மற்ற சமயங்களில் கடன் வாங்குவதை அவமானமாக கருதினார்கள். இவர்களையெல்லாம் பத்தாம்பசலி, மஞ்சப்பை என்று கிண்டலடித்து பல ஆண்டுகள் உதாசீனப்படுத்திவிட்டோம்.

இவர்களின் பிள்ளைகள் , அதாவது 1970 முதல் 1985 வரை பிறந்தவர்கள் (fast-food தலைமுறை), சிறுவயதில் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக பல இன்பங்களை அனுபவிக்க முடியாமல் போனது. இவர்கள் படித்து மேலே வரும்போது நாட்டில் பன்னாட்டு வேலைகள் உருவாகி, சம்பளம் கூடியது. சிறுவயதில் தாங்கள் அனுபவிக்காததை உடனே அடைந்துவிட வேண்டும் என்கிற இச்சை எழுந்தது. இது மானுட இயல்பு, இதில் தவறில்லை.

ஆனால் ஆசை கடிவாளம் இல்லாத குதிரையாக இருந்தால் ஆபத்து. சரியாக பணத்தை கையாண்டவர்கள் நிறைவாக உள்ளார்கள், தவறியவர்கள் சிரமப்படுகிறார்கள் . மஞ்சப்பைகள் ஒரு வீடு வாங்க 20 வருடங்கள் காத்திருந்தால் , இந்த fast-food தலைமுறை மிக குறுகிய காலத்தில் கடன் வாங்கியாவது பொருள் சேர்த்தார்கள். Shopping சென்றால், வேண்டுமோ வேண்டாமோ, வாங்கி குவித்தார்கள். கடன் அட்டை, வங்கிக்கடன் தாராளமாக கிடைத்ததால் மோகம் ஏறிக்கொண்டே இருந்தது. அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு தானே.  எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வாங்கிய கடனை அடைக்கவே சிரமம் என்கிற சூழல், பழகி போன வாழ்க்கை முறையை (lifestyle ) விடவும் முடியாமல் தவித்தார்கள். இப்போது தான் fastfood தலைமுறை தங்கள் பெற்றோரின் அறிவுரையை நினைவு கொண்டார்கள்.

இந்த fastfood தலைமுறையின் பிள்ளைகள் 1985 முதல் 1995 வரை பிறந்தவர்கள் - 2.0 தலைமுறை என அழைக்கலாம். பணம் இருந்தும் தவிக்கும் தங்கள் பெற்றோரை நேரடியாக கண்டவர்கள் இந்த 2.0. கண்ணால் கண்ட அனுபவம், உண்மை உணர்ந்த பெற்றோரின் அறிவுரை மற்றும் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ( access to information) 2.0 தலைமுறையின் அறிவை கூர்மையாக்கி உள்ளது.  தங்கள் தாத்தா பாட்டிகள் எவ்வாறு தேவையற்றதை ஒதுக்கினார்களோ, இவர்களும் அவ்வாறே உள்ளார்கள்.

பணத்தை செலவழிக்கும் முன்பு அதற்குரிய பொருள் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பிறகு செலவழிக்கிறார்கள். Value for Money என்பது முக்கியம். சுற்றுசூழலிற்கு பிளாஸ்டிக் அபாயம், மஞ்சப்பையே சரி என்று நாம் உணர்ந்துள்ளது போல, மஞ்சப்பை தலைமுறையின் அணுகுமுறையே சரி என்று மக்கள் புரிந்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.  

இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். ஏதோ ஒரு போக்கு காட்டி, இனி பொருளை விற்க முடியாது.  காசுக்கேற்ற தோசை கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். இது புரிந்து நடக்கும் நிறுவனங்கள் வெற்றிபெறும்.