தவ்ஹித் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி போலீசாரிடம் மனு

தவ்ஹித் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி போலீசாரிடம் மனு

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளால் நாட்டில் பெரும் பதற்றம் எழுந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டி செயல்படுத்திய நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கும் மூன்று பள்ளிவாசல்கள் உட்பட இலங்கை மற்றும் பல இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் பள்ளிவசகளைத் தடை செய்யக் கோரி மண்டல டி.ஐ.ஜி தம்மிக விஜேசேகரவிடம் பொலன்நறுவ பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு மனு ஒன்றைக் கொடுத்துள்ளது.

இந்த கூட்டமைப்பில் 29 பள்ளிவாசல் நிர்வாகங்கள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து, இந்த மனுவை அளித்ததுடன், அந்த மனுவில்,100 வருடங்களுக்கு மேல் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசத்தில் தவ்ஹீத் எனும் பெயரில் தோன்றிய அமைப்பின் வருகையின் பின்னரே பிரதேசத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவானதாகவும்,இந்தப் பின்னணியில் தற்போது மிகப் பெரும் பதற்றம் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கைகளைக் கட்டுபடுத்தும் வகையில் பொலன்நறுவயில் மட்டுமின்றி நாட்டின்  அனைத்து இடங்களிலும் உள்ள தவ்ஹீத் அடையாளத்துடன் செயல்படும் பள்ளிவாசல்கள் தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.