தான் படித்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர்

தான் படித்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர்

நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் என்பது போல் பழசை மறக்காமல் தான் படித்த பள்ளியை தேடி ஓடி வந்துள்ளார், எளிமையின் சிகரமாக விளங்கும் திருவண்ணாமலை கலெக்டர் திரு கந்தசாமி அவர்கள் .திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி  மேல கல்கண்டார் கோட்டை . இதில் தனது ஆரம்பக் கல்வியை (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) படித்தவர் திரு கந்தசாமி அவர்கள்.

தற்போது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக உயரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார். இருந்த போதும் தான் பால பாடம் பயின்ற பள்ளியை தேடி நேற்று வந்திருக்கிறார்.

அங்கிருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு சரிசமமாக  படிக்கட்டில் அமர்ந்து அவர்களுடன் நல்ல போதனைகளை சிறுவர்களுக்கு சிறுமியர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் மூன்று மணி நேரம் அவர்களுடன் செலவிட்டிருக்கிறார்.

அப்போது இளமையில் தன்னோடு படித்த சக மாணவனான திரு. சவுந்தரராஜன் என்பவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அதிகாரி என்ற எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறோம் என்று மமதை கொள்ளாமல் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக பேசி  அறிவுரை வழங்கி இருக்கிறார். இவர்களை வருங்கால தலைவர்களாக உருவாக்க ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தி தனது பொன்னான நேரத்தை தன்னை உருவாக்கிய பள்ளியில் 3 மணி நேரம் செலவிட்டு மாணவர்களுக்கு உரமிட்டு இருக்கிறார்.

இதுதவிர மாணவர்களும் கலெக்டர் கந்தசாமியின் பணியை பத்திரிக்கைகளில் படித்ததும், யூடியூப் மற்றும் தொலைக்காட்சியில் கலெக்டரின் நற்பணியை பார்த்ததையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப நிகழ்வாக மிக எளிமையாக  எந்த விதமான கேமரா வெளிச்சமும் இல்லாமல் சத்தமில்லாமல் ஒரு சாதனை நேற்று திருச்சி மாநகராட்சி பள்ளியில் நடந்தேறியிருக்கிறது

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் வாழ்வில் தன்னை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றிக்கடன் பெற்று இருக்கிறோம். இதனை திருப்பி செலுத்துவது என்பதை நாம் நல்ல நிலைக்கு உயர்வதுதான். எந்த உயர் பதவியில் இருந்தாலும் நல்ல நண்பர்களை நட்பை இழக்க கூடாது. பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள் உதவியுடன் உயர்ந்து நிற்கும் போது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நமது கடமையை,பங்களிப்பை கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை பிஞ்சு நெஞ்சங்களில் கலெக்டர் கந்தசாமி பதிய வைத்தார்.

 

தனியார் பள்ளிதான் உயர்வு அரசு பள்ளி மட்டம் என்ற கருத்து மாற வேண்டும். இதே அரசு மாநகராட்சி பள்ளியில் படித்த நான் கலெக்டராகவும், என் ஆரம்ப கால பள்ளி தோழன் செளந்தரராஜன் தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறோம். நாங்கள் உதாரணங்கள் தான் என கலெக்டர் கந்தசாமி மாணவர்களுக்கு உரமிட்டுள்ளார்.

 

பலரின் கனவுகளில் கந்தசாமி வந்து போவது நிச்சயம். கலாம் குறிப்பிட்டதை போல கலெக்டர் கனவு காண்பர்களில் எத்தனை கந்தசாமிகள் வந்தாலும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கிறது, பாரத தேசம்.