தாய்மொழி நமது முகம்.. நமது அடையாளம்..

தாய்மொழி நமது முகம்.. நமது அடையாளம்..

சர்வதேச தாய்மொழி தினம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி என ஐக்கிய நாடுகள் சபை 1999ஆம் ஆண்டு அறிவித்தது. உலக அரங்கில் தாய்மொழிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. இதற்காக இருவர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அதனால் தான், ஐ.நா. சபையின் கவனத்திற்கு தாய்மொழியின் முக்கியத்துவம் போய் சேர்ந்துள்ளது.

சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிப்பதன் மூலம், தாய்மொழியின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும். ஆங்கில ஆதிக்கத்தால், ஆக்கிரமிப்பால் தமிழ் அடைந்திருக்கும் கீழ்நிலை, தென்னிந்தியாவில் வேறு எந்த மாநில மொழிக்கும் ஏற்படவில்லை என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம்.

மனிதனின் மூளை தாய்மொழியில் தான் சிந்திக்கின்றது என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். நமக்கு எத்தனை மொழி தெரிந்தாலும், பிற மொழி கருத்துக்களை நமது மூளை தமது தாய்மொழியின் மூலமே புரிந்துகொள்கிறது. அதன் அடிப்படையிலேயே அது பதிவு செய்து வைக்கிறது. தேவைப்படும்போது, மீண்டும் தாய்மொழி மூலம் நினைவுபடுத்தி, பிற மொழியில் மாற்றம் செய்து பேசுகிறோம்.

இன்று ஆங்கில கல்வி பயிலும் மாணவர்கள், பெருக்கல், கூட்டல், கழித்தல், பெருக்கல் என்ற கணக்கின் அடிப்படை கோட்பாடில், அவர்கள் தடுமாறக் காரணம் ஆங்கிலத்தில் அவற்றை படித்து மனதில் பதிய வைப்பதுதான். தாய்மொழியான தமிழில் படித்தவனின் மூளை உடனுக்கு உடன் அதனை எடுத்துக்கொடுக்கும், ஆனால், தமிழ் மாணவன் ஆங்கிலத்தில் அதனைக் கூறும்போது, மூளை தமிழில் எடுத்து, அதனை ஆங்கிலப்படுத்தித் தருவதால், தடுமாறுகின்றனர். மூளையும் சோர்ந்துவிடுகிறது. இந்தத் தடுமாற்றம் கணக்கின் மீது வெறுப்பாக மாறி, மாணவனின் எதிர்காலத்தை பாதிக்கிறது.அதனால், அடிப்படை கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்றே பல அறிஞர்களும், ஆன்றோர்களும் கூறியிருக்கிறார்கள். மேல்நிலை, கல்லூரி படிப்பு வேண்டுமானால், ஆங்கிலத்தில் இருக்கலாம். ஆங்கில கான்வென்ட் நமது தமிழ்ப் பண்பாட்டை சீர்குலைப்பதுடன், கல்வியையும் சீரழித்துவிட்டது என்பதே உண்மை.

தாய்மொழி என்பது நமது முகம் போன்றது. அதுதான் உண்மையான அடையாளம். தாய்மொழி நன்கு கற்ற ஒருவன், பிற மொழிகளையும் எளிதாக கற்கலாம். ஆனால், முகத்தை இழந்து முகமூடியை மட்டும் போட்டுக்கொள்வது, வாழ்விற்கு நன்மை தராது.

இந்திய மொழிகள் யாவும் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிகம் ஆகியற்றோடு, வரலாற்றோடும் தொடர்புடையது. 
சிவபெருமானே தமிழை படைத்தார், தமிழ்மொழியை மக்களிடம் கொண்டு செல்ல அகத்தியரை தென் பாரதத்திற்கு அனுப்பினார் என ஆன்றோர்கள் கூறுவார்கள். அது கட்டுக்கதை என சிலர் பேசலாம். ஆனால், இன்று வடபாரதத்தில் உள்ள சிந்துசமவெளி அகழ்வாராச்சியில் தமிழ் மொழி அங்கு இருந்ததற்கான ஆதாரம் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே, தமிழ் மொழி தொன்மையானதும், பரந்துவிரிந்ததுமாக இருந்துள்ளதையும் இது உணர்த்துகிறது. தமிழில் இறைவன் எடுத்துக்கொடுத்த அடிகள் ஏராளம். அதுபோல பல இந்திய மொழிகளிலும் இறைவனோடு தொடர்புடைய செய்திகளைக் காணலாம்.  இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. பாரதம் முழுவதும் ஒரே சிந்தனை. அதுதான் அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வின் உறுதிப் பொருட்களாகும். பாரதி இதனை கூறும்போது, செப்பு மொழி பதினெட்டுடையாள், சிந்தனை ஒன்றுடையாள் என்கிறார். 

சங்கம் வைத்து வளர்த்த தமிழ் மொழிக்கோ, முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்தவர் சிவபெருமான். மொழியையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. தமிழ் இயற்கையை ஐந்து நிலங்களாக பிரித்துக்கூறுகிறது. அந்த ஐந்து நிலங்களுக்கும் தெய்வங்கள் உண்டு. நிலவியல், வானியியல், இயற்கை, அறிவியல் என எல்லா தளங்களிலும் ஏராளமான கருத்துகள் தமிழில் உண்டு, அதுவே நமது பெருமையும் கூட.

இதுபோல, ஒவ்வொரு மொழியும் கூட பல ஆழமான கருத்துள்ள, சுவாரஸ்யமான நிகழ்வுகளை கொண்டுள்ளன. வருங்கால சமுதாயத்திடம் இதனைக் கொண்டு சேர்த்து, ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியை பேணி பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் கல்வித்துறை, சர்வதேச தாய்மொழி தினத்தை அனைத்து கல்வி நிலையங்களும் சிறப்பாக கொண்டாட சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வளரும் பருவத்திலேயே தாய்மொழி பற்று ஏற்படும். தமிழகத்தில் உள்ள நமது தமிழ் மொழியோ, கல்தொன்றி மண் தோற்றா காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி. இறைவனின் மொழி.. பற்பல இலக்கியம் படைத்த செம்மொழி.. அதனை பேணிக்காக, வருங்கால சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க சர்வதேச தாய்மொழி தினத்தை ஒவ்வொரு நிறுவனங்களும், கல்வி நிலையங்களும், வீடுகளிலும், காலனிகளிலும், பேட்டைதோறும் கொண்டாடுவோம்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே!