திடீர் திருப்பங்கள் காணும் இலங்கை அரசியல்

திடீர் திருப்பங்கள் காணும் இலங்கை அரசியல்

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாத காலமாகவே குழப்பம் நிலவி வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக்குவதாக இந்நாள் அதிபர் மைத்திரிபால சிரிசேனா அறிவித்தார். தமக்கு பெரும்பான்மை உள்ளது என்றும் எனவே தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறினார். 

அதிபர் மைத்திரிபால சிறிசேனா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், தேர்தல் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி நடக்கும் என்றும் அறிவித்தார். இதனை எதிர்த்து பல கட்சிகள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்நேற்று நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது  என்று தீர்ப்பு வெளியானது.

இதனால், இன்று கூடிய நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவியது. ராஜபக்சேவும் அவரது ஆதரவு எம்.பிக்களும் வெளி நடப்பு செய்தார்கள். அதன் பின் இலங்கை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்று அறிவித்தார்.

எனினும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் பெரும்பான்மை இல்லை என்றும்,அதிபருக்கே அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆக, தினம் ஒரு அதிரடி திருப்பத்துடன் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.