தினமும் கழிவறை சுத்தத்தில் துவங்குகிறது இவரது நாள்

தினமும் கழிவறை சுத்தத்தில் துவங்குகிறது இவரது நாள்

ஒரு தலைமை ஆசிரியரின் நாள் தினமும் பள்ளி கழிவறையை சுத்தப்படுத்துதலில் துவங்குகிறது  என்றால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆம், கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், குண்டுல்பெட் ஹொங்கஹள்ளி அரசு ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் மஹாதேஷ்வர ஸ்வாமி தினமும் காலையில் பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாக பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார். பின்னர், பள்ளி வளாகத்திலுள்ள தோட்டமும், பள்ளி வகுப்பறைகளும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்கிறார். அதன் பின்பு தான் அவரது மற்ற அன்றாட  அலுவல்கள் துவங்குகின்றன.

அவர் இந்த மலைவாழ் குழந்தைகளுக்கான பள்ளியில் 1988ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தது முதல் இதை செய்து வருகிறார். இவர் குழநதைகள் படிப்பில் மட்டுமல்லாது, சுய சுகாதாரம், விளையாட்டு என எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாடுபடுகிறார். 

இது மட்டுமல்லாமல், தன் சொந்த செலவில் பள்ளியில் ஒரு தோட்டமும், நூலகமும் அமைத்திருக்கிறார். தலைமையாசிரியர் மஹாதேஷ்வர ஸ்வாமியின் இந்த நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.