தினம் தினம் புதிய சர்ச்சை - அடித்து ஆடும் சித்து

தினம் தினம் புதிய சர்ச்சை - அடித்து ஆடும் சித்து

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில தற்போதைய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து தினம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இப்போது அவர் பஞ்சாப் மாநில அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள சென்ற சித்து அங்கு பாகிஸ்தான் சீக்கிய பிரபந்தக் கமிட்டித் தலைவரும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியுமான கோபால் சிங் சாவ்லாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்,"நான் சித்துவை அவரது பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யும் படி கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் போவதாக சொன்னதால் நான் அவரை தடுக்கவில்லை." என்று கூறினார்.

அதற்கும் சித்து,"என் கேப்டன் ராகுல் காந்தி தான். அவர்தான் என்னை எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறார். மேலும், 20 காங்கிரஸ் தலைவர்கள் என்னை பாகிஸ்தான் போகும் படி கேட்டுக்கொண்டனர்." என்று கூறியிருந்தார். இது பஞ்சாப் மாநில அரசிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று மேற்சொன்ன தனது அந்த கருத்தையும் மறுத்துள்ள சித்து,"உண்மைகளை தெரிந்து கொண்டு பேச வேண்டும். என்னை ராகுல்காந்தி ஒருபோதும் பாகிஸ்தான் போக சொல்லவில்லை. நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே சென்றேன் என்பது உலகத்திற்கே தெரியும்." என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எப்படியோ தினம் தினம் செய்திகளில் இடம் பெறுகிறார் சித்து.