திருபுவனம் கொலை சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் கடையடைப்பு - 140 பேர் கைது

திருபுவனம் கொலை சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் கடையடைப்பு - 140 பேர் கைது

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் வாடகை பாத்திரக் கடை உரிமையாளர் வ. ராமலிங்கம் (48) கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து, பாஜக, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி, கும்பகோணம், திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள ஏறத்தாழ 1,600 கடைகளில் கிட்டத்தட்ட 1,400 கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. இதனால், கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்து அமைப்புகள் சார்பில் பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் கும்பகோணம் மகாமகக் குளம் வீரசைவ மடத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கி வந்தனர். காவல் துறையினர் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதித்திருந்த நிலையில், அதை மீறி ஊர்வலமாக வந்ததாகக் கூறி நாகேசுவரன் கோயில் வடக்கு வீதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். தவிர, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் திருபுவனத்துக்குச் சென்று ராமலிங்கம் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தபோது, அவரை செட்டிமண்டபம் அருகே போலீஸார் வழிமறித்து கைது செய்தனர். இந்த இரு இடங்களிலும் ஏறத்தாழ 140 பேர் கைது செய்யப்பட்டனர்.