திருபுவனம் கொலை வழக்கு - என்ஐஏ விசாரணை தொடக்கம்

திருபுவனம் கொலை வழக்கு - என்ஐஏ விசாரணை தொடக்கம்

திருபுவனம் தூண்டில்விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் வ. ராமலிங்கம் (45). வாடகை பாத்திரக் கடை உரிமையாளர். இவர் பிப். 5ஆம் தேதி இரவு ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். 

இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பின் ஆய்வாளர் செந்தில் தலைமையிலான குழுவினர் திருபுவனத்துக்கு வியாழக்கிழமை வந்து, விசாரணையைத் தொடங்கினர். இவர்கள் இரு நாள்கள் திருவிடைமருதூரில் தங்கி, உள்ளூர் போலீஸார், புகார் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை செய்ய உள்ளனர்.