திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை

திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை தொடர்பாக கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். 

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). வாடகை பாத்திரக் கடை உரிமையாளர். இவர் பிப். 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 16 பேர் மீது குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, 11 பேரை கைது செய்தனர்.  இதையடுத்து, இந்த வழக்குத் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மார்ச் 14-ம் தேதி மாற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, திருபுவனம் பகுதியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பினர் மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர். இதில், கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுகத் அலி தலைமையில் 4 பேர், ராமலிங்கத்தின் மகன் ஷியாம்சுந்தரிடம் விசாரித்தனர். 

மேலும், கைது செய்யப்பட்ட 11 பேர் குறித்து புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமசந்திரனிடமும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விவரங்களைக் கேட்டறிந்தனர். இந்நிலையில் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக காரைக்கால், திருச்சியை தொடர்ந்து கும்பகோணத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர். 

கும்பகோணத்தில் கேஎம்எஸ் நகரில் உள்ள அப்துல் மஜித் என்பவர் வீடு, காரைக்காலில் குத்தூஸ் என்பவரது வீடு மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அலுவலத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.