திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றம்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வுத் துறைக்கு மாற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக முன்னாள் நகரச் செயலர் வ.ராமலிங்கம் (45). அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபடுவதைக் கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு தன்னுடைய வாடகை பாத்திரக் கடையை மூடிவிட்டு, மகன் ஷியாம் சுந்தருடன் சுமை ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், ராமலிங்கத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. 

தனிப்படை போலீஸார், இவ்வழக்குத் தொடர்பாக குறிச்சிமலை எச். முகமது ரியாஸ், திருபுவனம் எஸ். நிஸாம் அலி, ஒய். சர்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூர் ஏ. அசாருதீன், திருமங்கலக்குடி முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், ஆவனியாபுரம் தவ்ஹித் பாட்சா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலர் ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலரைக் கைது செய்தனர். 

இந்நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சியினரும், இந்து இயக்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்து இந்தக் கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வுத்துறை விசாரணை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இதையடுத்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களிடம் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.