திருவண்ணாமலையில் சாதனை முயற்சி

திருவண்ணாமலையில் சாதனை முயற்சி

"பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்" என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (20.12.2018) 'என் கனவு' என்ற கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,508 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி  பள்ளிகளை சேர்ந்த 1,94,940 மாணவிகள்  கலந்து கொண்டு ஒரே நேரத்தில் தங்கள் பெற்றோருக்கு அஞ்சல் அட்டையில் 'என் கனவு' என்ற தலைப்பில் கடிதம் எழுதினர். இதில் அவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், லட்சியங்கள் ஆகியவற்றை தங்கள் பெற்றோருக்கு வெளிப்படுத்தினர். இந்த கடிதங்கள் பின்னர் அஞ்சல் பெட்டிகளில் சேர்க்கப்பட்டு அவர்கள் பெற்றோருக்கு அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை டானிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சுமார் 6000 மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் பெற்றோருக்கு கடிதங்கள் எழுதினர். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, மாவட்ட நீதிபதிகள் க.மகிழேந்தி, கே.ராஜ்மோகன், எம்.ஸ்ரீராம், எஸ்.லட்சுமி, மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் எல்.சந்திரசேகரன்,திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயகுமார், வருவாய் கோட்ட அலுவலர் உமா மகேஸ்வரி ராமசந்திரன், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக சாதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

- விஜயஸ்ரீ ரமேஷ் - சென்னை வழக்கறிஞர்