தி.மு.க.வின் வேடிக்கை அறிக்கை தேர்தல் அறிக்கையில்லை

தி.மு.க.வின் வேடிக்கை அறிக்கை தேர்தல் அறிக்கையில்லை

தேர்தல் அறிக்கைகள் என்பது  தொலைநோக்கு பார்வையோடு, ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணம்.  தேர்தல் வாக்குறுதிகள் மூலம் பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவாகவே இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளி வந்துள்ளன.   இரண்டு அறிக்கைகளிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.  அ.இ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்,  மத்திய அரசின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் மட்டுமே அணி வகுத்து வந்துள்ளன.  தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.  

          ஈழத் தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்வது, பழைய ஓய்வூதிய திட்டம், வேளாண் துறைக்கு தனி பட்ஜட் போடுவது.  போன்ற விஷயங்களில் ஒன்றாகவே இருக்கிறது.

          தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் -       தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் அனைத்தும் தமிழில் செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழழை அங்கீகரிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.  எப்பொழுதாவது தி.மு.க. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்களா என்ற கேள்வி எழுகிறது.  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது கூட தலைமை செயலகத்திலிருந்து வரும் உத்திரவுகள் ஆங்கிலத்தில் வந்து கொண்டிருந்தது, அதை முழுமையாக மாற்ற எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை. ஆனால் தோல்வி ஏற்படும் பொது மட்டும் தி.மு.க.விற்கு தமிழ் பாசம் மேலோங்கி விடும்.  திருமதி இந்திரா காந்தி பிரதமராக நீடிக்க தி.மு.க.வின் உதவி தேவை என்ற நிலையில் கூட கருணாநிதி தமிழுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை.  பொது செயல் திட்டம் உருவாக்கும் போதும் கூட, பிரதமரையோ உருவாக்கும் சக்தி கருணாநிதி என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற தி.மு.க.வினர், ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினால் பதில் கிடையாது.  இப்பொழுது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.

          தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு, மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.  இதில் இயற்கையாகவே எழும் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்.  முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், மதசார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக்க வேண்டும்.  இரண்டாது கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது ஆணை கட்ட ஆய்வு நடத்த உத்திரவிட்டது.  காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பற்றி ஸ்டாலின் ராகுல் மூலம் விளக்கம் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.  மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆணையத்தை களைக்கப்படும் என கூறும் ராகுல் காந்தி இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா.  கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட இயலாத ராகுல் காந்தி , தி.மு.க.வின் காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க முன் வருவாரா என்ற கேள்வியும் எழுகிறது. 

      கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கு அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.   இது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆட்சியிலிருந்த போது, தி.மு.க.வின் ஒப்புதலுடன் மாற்றம் செய்யப்பட்ட போது ஏன் தடுக்க வில்லை.  ஜி.எஸ்.டி. அதிகபட்சம் 28 சதவீதம் இருப்பதால், மாற்றி அமைக்கப்படும்.  இதுவரை ஜி.எஸ்.டியினால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என மேடைதோறும் முழங்கியவர்கள் , தற்போது ஆதரிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.  சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த உரிய சட்டம்  கொண்டு வரப்படும்-  பா.ஜ.க. கொண்டு வந்தால் அது சர்வாதிகார சட்டம், வாய்ப்பூட்டு சட்டம்  என்பார்கள்,   கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் எழும்.  இந்திய கலாச்சாரத்திற்கு புரம்பான வகையில் தி.மு.க. வின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை தடுக்க என்ன நடவடிக்கையை எடுக்கப்படும் என்பதையும்  விவரித்திருக்க வேண்டும்.

          நீட் தேர்வு வேண்டாம் -  தற்போது மக்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள்.  தி.மு.க. அமைச்சர்கள் நடத்துக்கின்ற மருத்து கல்லூரிகள் உண்டு கொழுக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டுள்ள திட்டமாகும்.      கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்தப்படும்.  இது ஒரு முரணான வாக்கியமாகும்.  ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க. ஆறு ஆண்டுகாலம்  ஏன் வாய் திறக்கவில்லை  என்பதற்கு விளக்கம் கிடையாது.

          ஒரு கோடி பேரூக்கு சாலை பணியாளர்கள் வேலை, 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர்கள் வேலை , வருமான வரி உயர்வு 8 லட்சம் , ஒட்டு மொத்த இந்தியாவிற்கான வாக்குறுதியை கற்பனையாள் அள்ளித் தொளித்துள்ளார்கள்.  தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் சாதியப்படாத ஒன்றை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

          மத்திய அரசின் வருமானத்தில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும்.   இது தி.மு.க. கூறிய ஆளுநர் முறையை ஒழிக்க வேண்டும் என கூறியது தான் ஞாபகத்திற்கு வருகிறது.  1967க்கு முன்னர் தி.மு.க.வினர் ஆட்டுக்கு தாடியும், ஆட்சிக்கு ஆளுநரும் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார்கள்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை ஒழிப்போம் என்றார்கள்.  ஆனால் இது நாள் வரை இது பற்றி வாய் திறக்கவில்லை.  இது போல் தான் இந்த வாக்குறுதி. 

          நிறைவேற்ற முடியாத ஒரு திட்டத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ86,689க்கு பதிலாக ரூ 1,50,000 வரை உயர நடவடிக்கை எடுக்கப்படும்.   எந்த வழியில் தனிநபர் வருமானத்தை பெருக்க முடியும் என்பதை குறிப்பிடவில்லை.

          அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது வேடிக்கையானது.   தி.மு.க. கூட்டணியில் பிரதமராக வரக் கூடிய காங்கிரஸ் கட்சி இன்று வரை இது பற்றிய கருத்துக்களை பரிமாறவில்லை.  2002லிருந்து இந்த திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.  2004 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏன் இதை ரத்து செய்ய முன் வரவில்லை.

        தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் மூலம் என்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.    கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றப்படும் என்பது கூட நடைமுறைக்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுகிறது.  தி.மு.க. தலைவர்கள் மீது உள்ள வழக்குகள் காரணமாக பாராளுமன்றத்தில் கூட இவர்களால் குரல் எழுப்ப இயலாது.   தமிழகத்தில் என்ன பிரச்சினைகளை எழுப்புகிறார்களோ அவற்றையெல்லாம் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு தீர்க்க முயலுவோம் என்பதே வெற்று வாக்குறுதியாகும். 

          10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியிலிருந்த போது தமிழ் மொழிக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியும்,  கச்சத் தீவை மீட்க என்ன நிர்பந்தம் மத்திய அரசுக்கு கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது.   ஏழு பேர்களை விடுவிக்க தி.மு.க. கோரியதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.  இது வரை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டங்களில் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை.  அல்லது நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டதா என்பதற்கும் பதில் இல்லை.  எதையெல்லாம் தடுத்தார்களோ அதையே மீன்டும் கொண்டு வருவோம் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலையாக தான் தெரிகிறது.  

          நாட்டின் அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொண்டு வந்துள்ளது.  ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பவையாகும்.  முழு வலிமையுடன் ஆட்சியில் அமர கூடிய கட்சியால்  மட்டுமே செயல்படுத்த கூடிய விஷயங்களை வெறும் 20 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வால் செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.  குறிப்பாக பெண்களுக்கு 33 சதவீத் இட ஒதுக்கீடு,  இந்த மசோதாவிற்கு தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.  முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியின் போது, லாலுவின் எதிர்ப்பின் காரணமாகவே பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர இயலவில்லை என்பதை ஸ்டாலினுக்கு புரிய வைக்க வேண்டும்.

          மத்தியில் ராகுல் காந்தி தான் பிரதமர் என வாய் விட்டு கதறும் ஸ்டாலின், தங்களது தேர்தல் அறிக்கையில் இலங்கையில் தமிழர்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்படும், இலங்கை இனப்படுகொலை விசாரிக்கவும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஹிந்தி திணிப்பு  என்பது பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட தேர்தல் அறிக்கையில் கிடையாது.  காங்கிரஸ் கட்சி கோபம் கொண்டு விடும் என்ற அச்சமா என தெரியவில்லை.

          ஏற்கனவே ஒப்புதல் பெற்ற மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை, கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருப்பது, தி.மு.க.விடம் கானப்படும் கொள்கை வறட்சியாகும்.   ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதி இருக்கையில், இயற்கை சீற்ற நிவாரணத்துக்காக பட்ஜெட்டில் அரை சதம் நிதி ஒதுக்கப்படும் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது.  அரை சதம் என்பது அரசுக்கு வரும் வருவாயிலா என்பதை தெளிவுப்படுத்தப்படவில்லை. 

          பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை விடுதலை செய்ய ஸ்டாலினுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  மேலும் சென்னையில் ராகுல் காந்தியிடம் இந்த கேள்வியை எழுப்பியபோது,  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை விடுவிக்கும் முடிவு சட்டத்திற்கு உட்பட்டது.  நீதி மன்றமே இறுதி முடிவு எடுக்கும்.   ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் பணி நியமிக்கப்படும் என்பது கற்பனையில் உதித்தது.  தமிழகத்தில் உள்ள மொத்த சாலைகளின் நீளம் எவ்வளவு என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா என தெரியவில்லை.   தமிழகத்தின் வருவாயை கணக்கிடாமல் கூறிய வாக்குறுதியாகவே தெரிகிறது.   அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த வாக்குறுதியாகவே  தேர்தல் அறிக்கை விளங்குகிறது. 

- ஈரோடு சரவணன்