தேசத்தின் எழுச்சி நாயகன்

தேசத்தின் எழுச்சி நாயகன்

விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஹிந்துக்களின் எழுச்சி நாயகன்.  சமூகத்தில் இருந்த தீண்டாமை தீயை போக்க தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதன்.  ஹிந்துத்வம் எனும் வார்த்தையை அனைத்து தரப்பு மக்களிடத்தேயும் கொண்டுசேர்த்ததில் முக்கியபங்காற்றினார்.  ஹிந்து தர்மத்தில் இருந்த சிறு குறைகளை போக்க அரும்பாடுபட்டார்.  

சுதந்திரபோராட்ட வீரர், எழுத்தாளர் சமூகசீர்திருத்தவாதி என பன்முகதன்மை கொண்டவர்.    விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு பதினைந்து ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைபட்டு கிடந்தார். தனது விடுதலைக்குபின் சமூக சீர்திருத்தங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். 

சமூக சீர்திருத்தம் பற்றி கூறும்போது "மற்றவர்கள் தங்கள் வாழ்வில் சீர்திருத்தங்களை கடைபிடிக்கிறார்களோ இல்லையோ, நான் என் வாழ்வின் கடைசி வரை சீர்திருத்தங்களை கடைபிடிப்பேன் அதனை பரப்புவேன்" என்றார்.   கல்வியின் மூலமே சமூதாய முன்னேற்றத்தை உண்டாக்கமுடியும் என நம்பினார். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலமே சாதிய ஏற்ற தாழ்வுகள் நீங்கி ஹிந்துக்களாக ஒன்றிணைவோம் என கூறியுள்ளார்.   

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் பட்டியலின  ஹிந்துக்களை நுழைய செய்து புரட்சி செய்தார்,  மேலும் அவர்களின் கைகளால் மூலவருக்கு அபிஷேகம் செய்ய செய்தார்.  1933 ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களும் அருந்தும் தேநீர் விடுதியை தொடங்கிவைத்தார்.

அதில் பட்டியலினத்தை சார்ந்த ஒருவரை பணிக்கு அமர்த்தி அனைவரையும் தேநீர் அருந்த செய்தார். அன்றைய தீண்டாமை அதிகம் இருந்த காலகட்டத்தில் இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  நவராத்ரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகளின் போது மற்ற  சமூகத்தாரின்   வீடுகளுக்கு சென்று இனிப்புகளை கொடுப்பார்.  பட்டியலின குழந்தைகளுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லிகொடுப்பார். 

வர்ணாஸ்ரமம் படி  மக்களை குணத்தின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரித்துள்ளது வேதம் ஆனால் சாவர்க்கர் மனிதர்களை அவர்கள் செய்த நன்மை மற்றும் தீமையின் அடிப்படையில் இரு பிரிவாக பிரித்துள்ளார்.

நாளைய ஹிந்து சமூகமும் இந்தியாவும் எப்படி இருக்க வேண்டும் என்று அன்றே கனவு கண்டவர் இவர். இன்றைய நவீன இந்தியாவின் முன்னோடியாக இருபதாம் நூற்றாண்டிலேயே  நவீனத்தை புகுத்தி இருபத்தியோராம் நூற்றாண்டை கண்டவர். 

 மற்றவர்கள் செய்ய துணியாத செயல்களை  துச்சமென எண்ணி சமூகநலனே முக்கியம் என தன் இறுதிமூச்சு வரை ஓழாமல் உழைத்தவர். எழுச்சி நாயகன் வீர சாவர்க்கர் என்றும் நாட்டின் நாயகரே!     

- தரணிதரன் பெருமாள்