நமக்குள் ஒரு ‘தீபாவளி‘!

நமக்குள் ஒரு ‘தீபாவளி‘!

தீபாவளி பண்டிகை, ஞான வழிகாட்டுதல் நிறைந்த பண்டிகை!

தீபாவளி பண்டிகையின் பின்னணி என்ன?
‘மகாவிஷ்ணு – பூமாதேவியின் மகன், நரகாசுரன். பூமாதேவியின் அனுமதியுடன்தான் அவனை அழிக்க முடியும் என்று மகாவிஷ்ணு வரம் அருளியிருந்தார். இதனால்தான், மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர், பூமாதேவியின் அம்சமான சத்யபாமா துணையுடன் நரகாசுரனை அழித்தார். ஐந்து அரண்கள் கொண்ட கோட்டையைத் தகர்த்து, உள்ளே புகுந்து, நரகாசுரனை வீழ்த்தினார் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் நரக இருள் நீங்கி, சொர்க்க ஒளி ஜொலித்தது. இந்த நிகழ்வை அனைவரும் காலகாலத்துக்கும் நினைவுகூர்ந்து பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என, ஸ்ரீகிருஷ்ணரிடம் நரகாசுரன் வரம் கேட்டான். ஸ்ரீகிருஷ்ணரும் வரம் அருளினார். இதிலிருந்துதான் தீபாவளி பண்டிகை பிறந்தது’ – இது, நமது ஆன்மிகப் பொக்கிஷங்கள் வழங்கும் விளக்கம்.

நரகாசுர வதம் என்ற புராண நிகழ்வில் இணைந்துள்ள ஞான வழிகாட்டுதல் என்ன?
முதலில், குறியீடு விளக்கங்களைப் பார்க்கலாம் :
ஸ்ரீகிருஷ்ணர் = பரமாத்மா.
பூமாதேவி = பூலோக வாழ்க்கை.
நரகாசுரன் = கர்மவினைகளால் தெய்வீகத் தன்மையை மறந்திருக்கும் மனிதர்.
பூமாதேவியின் துணையோடுதான் நரகாசுரனை அழிக்க முடியும் என்ற வரம் = பூலோக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, கர்மவினைகளைப் போக்கி, தெய்வீகத்தன்மையை அடைதல்.

ஐந்து அரண் கொண்ட கோட்டை = பஞ்சபூதங்களான மண், நீர், தீ, வாயு, ஆகாயம் ஆகியவற்றால் உருவாகியுள்ள மனித உடல்.
ஐந்து அரண் கோட்டை தகர்ப்பு = ‘நான் என்பது எனது உடல்’ என்ற தவறான எண்ணத்தை மாற்றுதல்.
நரகாசுரன் அழிப்பு = தவறான எண்ணம் நீங்கியதால், தவறான செயல்கள் (அசுரத்தன்மை) நீங்குதல்.
சொர்க்க ஒளி ஜொலிப்பு = ‘நான் என்பது ஆத்மா’ என்ற தெய்வீகத் தன்மையை உணர்தல்.
ஆக –

தீபாவளி பண்டிகையில் இணைந்துள்ள ஞான வழிகாட்டுதல் :
நாம், தெய்வீகத்தன்மை கொண்டவர்கள். கர்ம வினைகளால் மனிதராய் பிறந்து, தெய்வீகத்தன்மையை மறந்திருக்கிறோம்; ‘நான் என்பது எனது உடல்’ என்ற தவறான எண்ணத்தால், ஆசாபாசங்களில் சிக்கி, தெய்வீகத்தன்மையை மறந்திருக்கிறோம். பூலோக வாழ்க்கையின்போது, தர்ம வழியில் செயல்பட்டால், கர்மவினைகள் என்ற நரக இருள் அழியும்; தெய்வீகத்தன்மை என்ற சொர்க்க ஒளி மலரும்!
*
நமது ஆன்மிகப் பண்டிகைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் ஒவ்வொன்றிலும், இப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டுதல்கள் குறியீடுகளாக இணைந்திருக்கின்றன.

‘ஆஹா’ என்று பெருமிதப்படுவதோடு நின்றுவிடுவதில் எந்த பயனும் இல்லை. குறியீடு அர்த்தங்களை உணர்ந்து, பின்பற்றினால்தான், பயனடைய முடியும்.

நமக்குள் இருக்கும் அசுரத்தன்மைகளை நாம் அழி்த்தால், நமது வாழ்க்கை முழுவதும் தீபாவளி பண்டிகையாக ஜொலிக்கும்!

– பூஜ்யா.

வாசகர்கள் அனைவருக்கும் NewsTN  தன் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.