நம் எதிரி ஹிந்தி அல்ல ஆங்கிலம் - அமைச்சர் க.பாண்டிய ராஜன்

நம் எதிரி ஹிந்தி அல்ல ஆங்கிலம் - அமைச்சர் க.பாண்டிய ராஜன்

அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ் இணைய மாநாடு (டி.ஐ.சி.) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை தாங்கி பேசியதாவது ;-

உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேசப்படுவது கிடையாது. உலகம் வல்லரசாக மொழி என்பது ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. மொழிக்கு வார்த்தைகளை உருவாக்குவது என்பது மிக முக்கியம்.

உலகில் உள்ள 7 ஆயிரத்து 500 மொழிகளில் 101 மொழிகள் தான் இணையதளத்தில் இருக்கிறது. இன்றைய உலகில் 80 சதவீதம் தகவல் தொடர்புகள் செல்போன் மற்றும் இணையதளம் மூலமாகவே நடைபெறுகின்றன. இதில் 54 சதவீதம் தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. தமிழ் மொழியில் தகவல் தொடர்பு 0.01 சதவீதம் மட்டுமே இணையதளத்தில் உள்ளது.இதனால் தமிழ் மொழி அழித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே இன்றைய இளைஞர்கள் இணைய தகவல் தொடர்பில் ஆங்கிலத்தை புறக்கணித்து தமிழ்மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

இன்றைய தலைமுறையினர் புதிய வார்த்தைகளை உருவாக்கி தமிழ் காப்பு போராட்டம் நடத்த சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும். தமிழ் வளர்ச்சிக்காக, தமிழை வாழ வைக்க, புதிய தமிழ் சொற்களை படைக்க ஆங்கிலத்தை எதிர்த்து மீண்டும் ஒரு மொழிப்போர் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்