நாட்டின் பாதுகாப்புக்காக மேலும் பல கடுமையான சட்டங்களை பாஜக கொண்டு வரும் - ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்புக்காக மேலும் பல கடுமையான சட்டங்களை பாஜக கொண்டு வரும் - ராஜ்நாத் சிங்

தேசத் துரோக சட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவிக்கிறது. ஆனால் பாஜகவோ, நாட்டின் பாதுகாப்புக்காக தேவைப்பட்டால் மேலும் பல கடுமையான சட்டங்களை கொண்டு வரும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்த போதிலும், நமது பாதுகாப்புப் படையினரின் வீரம் குறித்து கேள்வியெழுப்பியும், எத்தனை பேர் பலியானார்கள் என்று புள்ளி விவரம் கேட்டும், காங்கிரஸ் கட்சியும், பிற எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்கின்றன. துணிச்சலான ராணுவம் தமது தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்காது. 

உலகில் 4ஆவது நாடாக, செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா சோதனை நடத்தியுள்ளது. இதற்கு, நமது விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரம் கொடுத்ததுதான் காரணம். இதனால்தான் புது வரலாறு ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை மீண்டும் தேர்வு செய்ய மக்கள் தயாராகி விட்டனர். மக்களின் மனநிலையை காங்கிரஸூம், பிற எதிர்க்கட்சிகளும் புரிந்து கொண்டுவிட்டன. இதையடுத்தே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அக்கட்சிகள் சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளன. இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகும். பிரதமர் மோடி அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில், நமது நாட்டின் பொருளாதாரம் முன்னேறியிருப்பதை சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மத்தியப் பிரதேச மாநிலம், ஜமுனா கலாரி கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.