'நான் சாதாரண சி.எம்.' - மனோகர் பாரிக்கர் ஃபிளாஷ்பேக்

'நான் சாதாரண சி.எம்.' - மனோகர் பாரிக்கர் ஃபிளாஷ்பேக்

மனோகர் பாரிக்கருக்கு கோவாதான் பூர்வீகம். 1955-ம் ஆண்டு மபுஸா எனும் மாவட்டத்தில் பிறந்தவர், பள்ளிக் காலத்திலேயே பள்ளிப்பாடங்களுடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ்.சிந்தனைகளும் இவருக்குள் விதைத்து முளைந்தன.

ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து ராமஜென்ம பூமி இயக்கத்துக்குள் தன்னை பொருத்திக்கொண்டார். மிகுந்த வேகத்துடன் செயல்பட்டார். ஒரு பக்கம் பிஸ்னஸ், இன்னொரு பக்கம் அரசியல் என்று இரண்டிலுமே பொறுப்புடன் பணியாற்றி வந்தார். 94-ம் ஆண்டு. பாஜகவின் வேட்பாளராக கோவாவில் நின்றார். அது அவருக்கு மட்டுமல்ல... கோவாவில் பாஜக முதல் முறையாக களமிறங்கியது. நான்கு பேர் வென்றனர். அவர்களில் மனோகர் பாரிக்கரும் ஒருவர். ஒரு எம்.எல்.ஏ.வாகப் புகுந்தவர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். அதையடுத்து கோவாவின் முதல்வராகவும் பதவி வகித்தார். 

ஒருமுறை, காவல் ஆணையரின் மகன் காரில் சீறிப்பறந்து வந்துகொண்டிருந்தார். அப்போது காட்டுத்தனமாக வேகத்தில் வந்த அந்த இளைஞன், ஓரிடத்தில் திரும்புகிற போது பிரேக் பிடித்து, வேகத்தை சட்டெனக் குறைத்து, முன்னே சென்ற டூவீலர்காரரின் மீது மோதிவிட்டான்.

அந்தப் பையனுக்கு ஆத்திரமான ஆத்திரம். விறுவிறுவென டூவீலர் அருகே சென்றான். 'என்னய்யா வண்டி ஓட்டுறே? நான் யாரு தெரியுமா இங்கே உள்ள போலீஸ் கமிஷனரோட பையன்' என்று ஸ்டைலாகவும் கோபமாகவும் சொன்னான்.

டூவீலர் ஓட்டி வந்த அந்த நபர், வண்டியைச் சரிசெய்துவிட்டு, ஆடையில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டிவிட்டு, டூவீலரில் ஏறி, வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

அந்தப் பையனைத் திரும்பிப் பார்த்தார்... பார்த்தவர் சொன்னார்... 

'அப்படியா தம்பி. நீங்க போலீஸ் கமிஷனரோட மகனா? நான் சாதாரண சி.எம்.தாம்பா. எம்பேரு மனோகர் பாரிக்கர்' என்றார் அவர்.