நான் தமிழுக்கு எதிரானவனா?

நான் தமிழுக்கு எதிரானவனா?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருது தேர்வுக் குழுவின் உறுப்பினராக என்னை நியமித்திருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் எனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இக்குழுவின் உறுப்பினராக எனக்கான பணி வரன்முறைகள் தொடர்பாகவும் தெரிவிக்கப்படவில்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மத்திய அரசானது போதிய நிதிகளை ஒதுக்கி அதனை ஊக்கப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அதுகுறித்தும் நான் கருத்துகளைத் தெரிவிக்கப் போவதில்லை. வேதங்களில் இருந்து திருக்குறள் வந்ததாக நான் திரிபுவாதத்தை முன்வைத்ததாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை நான் ஏற்கவில்லை. 

தமிழ் கலை மற்றும் கலாசாரத்தில் எனது பணிகள் என்பது கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.  

திருக்குறள் வேதங்களில் இருந்து வந்தது என்று நான் தெரிவித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வை அல்ல. எனக்கு முன்பாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்துகளாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப்பெரும் அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லீஸ், ஜி.யு.போப், உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். 

300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி மு.க.ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலக தமிழ் அறிஞர்கள் மத்தியில் அவர் தமிழ் மொழி குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார். எனவே, தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற வேண்டும்.