நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் மீனவர் கடல்போக வேண்டாம்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் மீனவர் கடல்போக வேண்டாம்

தமிழகத்தில் நவ.19 முதல் 21ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும்; காற்றுவேகம் அதிகரிப்பதால் இந்த 3 நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக பகுதிகளைக் கடந்து காற்றழுத்த தாழ்வாக வலுவிழந்த கஜா புயல், தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் சென்றது. அதன்பின் மீண்டும் புயலாக பலமடைந்து லட்சத்தீவு அருகே 60 கி.மீ தொலைவில் கஜா மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவை கடந்து செல்லும். அப்போது காற்று மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசுவதுடன், பலத்த கனமழையும் பெய்யும். எனினும், இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இதற்கிடையே, தெற்கு அந்தமான் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். இந்த தாழ்வு நவம்பர் 19ம் தேதி மேற்கு திசையில் தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இதனால் வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்யும். வட தமிழகப் பகுதிகள் அதிக மழையை பெற வாய்ப்புள்ளது.
கடலோரப் பகுதிகளில் காற்று தாக்கம் பலமாக இருக்கும். எனவே, 19 முதல் 21ம் தேதி வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.