நாளை முதல் 42வது  சென்னை புத்தக கண்காட்சி -  2019

நாளை முதல் 42வது சென்னை புத்தக கண்காட்சி - 2019

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  சார்பில் நடத்தப்படும் 42வது சென்னை புத்தக கண்காட்சி நாளை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடல் கல்வியியல் மைதானத்தில் துவங்குகிறது. நாளை மாலை 6.00 மணிக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்காட்சியை துவக்கி வைக்கிறார். 

கண்காட்சி வளாகத்தில் தமிழன்னையின் பிரம்மாண்ட திருஉருவ சிலை நிறுவப்பட உள்ளது. 

கண்காட்சியில் 820 அரங்கங்களில் 12 லட்சம் தலைப்புகளில் 1.5 கோடி புத்தகங்கள் இடம் பெற உள்ளன. கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடியும் உண்டு.

ஜனவரி 4 முதல் 20 வரை 17 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். இந்த 17 நாட்களில் 10 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கண்காட்சி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி போன்றவையும் எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன. 

கண்காட்சி வளாகத்தில் மருத்தவ வசதிகள், ரத்த தான முகாம், ஏ.டி.எம் வசதி, ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சி நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.10/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.100/-க்கு பாஸ் வசதியும் உள்ளது. இந்த பாஸை பயன்படுத்தி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கண்காட்சிக்கு வந்து செல்லலாம். பபாசியின் இணையதளத்தில் நுழைவு சீட்டுக்கள் பெற்றுக்கொள்ளும் வசதியும் எற்படுத்தப்பட்டுள்ளன.