நிஜ 'மெர்சல்' நாயகன் மறைந்தார்

நிஜ 'மெர்சல்' நாயகன் மறைந்தார்

'மெர்சல்' பட பாணியில் ரூ.5/-க்கு வைத்தியம் பார்த்து வந்த டாக்டர்.ஜெயச்சந்திரன் இன்று காலமானார். சென்னையின் ராயபுரம், வண்ணாரப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் '5 ரூபாய் டாக்டர்' என்று இவர் ரொம்பவே பிரபலம்.  கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் சென்னை, மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 1971ம் ஆண்டு தன் மருத்துவ படிப்பை நிறைவு செய்த கையோடு அப்போது மருத்துவ வசதியில்லாமல் இருந்த வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் கிளினிக் துவங்கினார். ஆரம்பத்தில் ரூ.2/- மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டார். பின்னர், ரூ.5/- தாக கட்டணத்தை உயர்த்தியவர் அதற்கு மேல் கடைசிவரை உயர்த்தவே இல்லை. 

ஏழை மக்களுக்கு எளிய கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கியதோடு மட்டுமல்லாமல், சமூக நல பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். பல மருத்துவ முகாம்களை நடத்தினார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குதல் முதலிய பல சமூக பணிகளை செய்து வந்தார். சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் இன்று தனது 71வது வயதில் காலமானார். இவரது மறைவால் வண்ணாரப்பேட்டை பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.