நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ வேண்டும்

நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ வேண்டும்

இறுதியில் நீதிமன்றத்தை அணுகினால் நமக்கு நியாயம் கிடைக்கும் என்பதே ஒவ்வொரு இந்தியா குடிமகன்களுக்கும் தெம்பு கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் சமீப காலங்களாக மக்களின் நம்பிக்கையில் மண் அள்ளிப்போடுகின்றது நீதிமன்றங்கள். தேசத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய உச்சநீதிமன்றம் தமது பொறுப்பை மறந்து விட்டு, வெறும் விளம்பரங்களுக்காக ஆசைப்படுகின்றதோ என சாதாரண பாமர குடிமகனுக்கே சந்தேகம் வந்துள்ளது. ஓரின சேர்க்கை தீர்ப்பாக இருக்கட்டும், ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற தொன்மை தொட்டு நாம் பாதுகாத்து வருகின்ற, நமது கலாச்சாரத்திற்க்கெதிரான, பத்தினிப்பெண்களை கொச்சைப்படுத்துகின்ற தீர்ப்பாக இருக்கட்டும், சபரிமலை ஆச்சார விஷயங்களுக்கெதிரான தீர்ப்பாக இருக்கட்டும், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்துக்கொடுத்த தீர்ப்பாக இருக்கட்டும் .... அத்தனையும் மக்கள் மனதில் நீதிமன்றத்தின்  மீது கொண்டிருந்த  பெரும் மதிப்பை  சீர்குலைத்து விட்டது. 

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது பாரத நாட்டில்!. இந்த நாட்டில் கடைபிடித்து வருகின்ற குடும்ப அமைப்பையும், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டினையும் வெளிநாடுகள் வெகுவாக புகழ்கின்றனர். தங்களது நாடு இப்படிப்பட்ட உயர்ந்த கோட்பாடுகளிலிருந்து வழுக்கி விட்டதே என கவலைப்படுகின்றார்கள். அவர்களின் ஆசை மையமாக பாரதம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்நாட்டு நீதிபதிகளின் தீர்ப்பு, இந்நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் சார்ந்து இருக்கவேண்டும் என இந்நாட்டு குடிமக்கள் விரும்புவதில் என்ன தவறிருக்கிறது ?  அதற்கு மாறான தீர்ப்புகள் வரும்பொழுது வெகுஜன மனதானது கொதிக்க ஆரம்பிக்கின்றது. எரிமலையாக அதை வெடிக்க விடாமல், குளிர்ச்சியூட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களையே சாரும்..  

சபரிமைக்கு செல்கின்ற பக்தர்களை நிலக்கல் என்னுமிடத்தில் இருந்து அரசாங்க பேருந்தில் பம்பை வரையிலான இருபது கிலோமீட்டருக்கு சுமார் நாற்பது ரூபாய் கொடுத்து போக கட்டாயப்படுத்துகின்றது கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம். இது பக்தர்களை சுரண்டும் செயல் என கூறிய சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம், நாங்கள் நூறு பேருந்துகளை இலவசமாக இயக்க தயார், பக்தர்களும் இலவசமாக நிலக்கல் முதல் பம்பை வரையிலும், திரும்ப பம்பையிலிருந்து நிலக்கலுக்கும் பயணம் செய்யட்டும், என திருவாங்கூர் தேவஸ்வம் போர்டினை அணுகி அனுமதிக்காக விண்ணப்பித்தோம். அவர்கள் மறுத்து விட்டனர்.     பக்தர்களின் நலனில் அக்கறையில்லாத தேவஸ்வம் போர்டு நாசமாக போகட்டும் என சாபமிட்டுக்கொண்டு, கேரளா உயர்நீதி மன்றத்தை பெரும் நம்பிக்கையோடு அணுகி மனு கொடுத்தோம். விசித்திரமான பதிலை கொடுத்தது நீதிமன்றம். உங்கள் திட்டத்தை ஏற்று நடத்த தேவஸ்வம் போர்டு விரும்பவில்லை, ஆகவே உங்களுக்கு  அனுமதியில்லை !.    "இதை தான் தேவஸ்வம் போர்டு முதலிலேயே எங்களிடம் கூறிவிட்டதே . அதனால் தானே நாங்கள் நீதிமன்றத்தை நாடி வந்தோம் "என கேட்டால், அதற்க்கு பதில் இல்லை.  இப்படி நீதிமன்றங்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் இருந்தால் பக்தர்களுக்கு அல்லது ஜனங்களுக்கு நீதி மன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை அற்று விடும்.வெளி நாடுகளை போன்று நம் நாட்டில் மக்கள் உடனடி உணர்ச்சிவச ப்பட்டு    பெரும் கூட்டமாக வீதிக்கு வராமல் தான் இருந்தார்கள் . ஆனால் சபரிமலை தீர்ப்பு அந்த எண்ணத்தை தகர்த்தெறிந்தது.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற வாசகத்தை உண்மையாக்கும் பொருட்டு, சிவனே என வீட்டு வேலைகளை மட்டும் கவனித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் வீதிக்கு வந்து போராடியதையும் போராடிக்கொண்டிருப்பதையும் நாம் பார்க்கின்றோம். சம்பந்தப்பட்ட துறையினர் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஈரோடு என் ராஜன்.