நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்

நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார். 

முன்னதாக, தில்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யான மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் அண்மையில் ராகுலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், "ரஃபேல் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லாத தகவல்களை ராகுல் காந்தி அளிக்கிறார்; இதன்மூலம் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கிறார். இதற்காக அவர்மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். 

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி லேகி சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடுகையில், "பொதுமக்கள் முன்னிலையில் வந்து, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பாதுகாவலர் நரேந்திர மோடி திருடர் எனத் தெரிவித்து விட்டது என ராகுல் கூறியுள்ளார். அதாவது ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து ராகுல் தவறான தகவல்களை அளிக்கிறார். இது வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்' என்றார்.  

நீதிமன்ற தீர்ப்பில் அரசியல்வாதிகள் எதையாவது கண்டுபிடிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ கூடாது. தீர்ப்பு குறித்து ராகுல் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். ஆதலால் அவருக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்போம். இதுகுறித்து ராகுல் காந்தி அடுத்த வாரம் திங்கள்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தமது விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொன்ன தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், எனினும் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வெளியிட்டது குறித்து, அமேதியில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு கடந்த 10ஆம் தேதி அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் செய்துள்ளார் என உச்சநீதிமன்றம் தெளிவாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

ஆனால் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், மனுதாரர்களின் புதிய ஆவணங்கள் அடிப்படையில் சீராய்வு மனுவை விசாரிக்கப் போவதாக மட்டுமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.