நீரவ் மோடிக்கு எதிராக - புதிய குற்றப்பத்திரிகை

நீரவ் மோடிக்கு எதிராக - புதிய குற்றப்பத்திரிகை

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.11,400 கோடி வரை கடன் வாங்கிய வைர வர்த்தக தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல், வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். இவர்களில், நீரவ் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்று விட்டார்.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. இந்த நிலையில், நீரவ் மோடி லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வருவதாகவும், அங்கு அவர் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பிரிட்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் 2 நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, நீரவ் மோடிக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை ஒன்றை, மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் துணை குற்றப்பத்திரிகை இதுவாகும். 

கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.1,873.08 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதேபோல, அவருக்குச் சொந்தமான ரூ.489.75 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.