'நேஷ்னல் ஹெரால்ட்' வெளியேற தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

'நேஷ்னல் ஹெரால்ட்' வெளியேற தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜவஹர்லால் நேருவால் 1938ல் துவக்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்ட்'  பத்திரிக்கையை ஏ.ஜெ.எல் நிறுவனம் வெளியிட்டு வந்தது. இந்த நிறுவனம்  நஷ்டத்தில் இயங்கி வந்ததால் 2008ல் 'நேஷனல் ஹெரால்ட்' பத்திரிக்கை  நிறுத்தப்பட்டது. மேலும், ஏ.ஜெ.எல் நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து  ரூ.90 கோடி கடன் வாங்கியது. இந்த கடனை வசூலிக்க சோனியாகாந்தி,  ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ள  'யங் இந்தியா' நிறுவனம் ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும்  வாங்கியது. 

ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் ரூ.2000கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா  நிறுவனம் இதன் மூலம் அபகரித்ததாக கூறி டாக்டர்.சுப்ரமணியம் சுவாமி  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து  வருகிறது. 

இந்நிலையில், 'நேஷனல் ஹெரால்ட்' பத்திரிக்கையை நடத்தி வந்த ஏ.ஜெ.எல் நிறுவனம் 56 ஆண்டுகளாக தில்லியில் மத்திய நகர்புற மேம்பாட்டு  அமைச்சகத்துக்கு சொந்தமான நிலத்தில் குத்தகைக்கு இயங்கி வந்தது. இந்த  குத்தகை நவம்பர் 15ல் முடிந்து விட்டதை அடுத்து ஏ.ஜெ.எல் நிறுவனம்  இடத்தை காலி செய்யவேண்டும் என்று மத்திய நகர்புற மேம்பாட்டு  அமைச்சகம் உத்திரவிட்டது. 

இதனை எதிர்த்து ஏ.ஜெ.எல் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தது. இந்த மனுவினை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் ஏ.ஜெ.எல் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தும், அலுவலகத்தை 2  வாரங்களுக்குள் காலி செய்ய உத்திரவிட்டும் தீர்ப்பளித்துள்ளது.