பகைவனுக்கு அருளும் சூர சம்ஹாரம்

பகைவனுக்கு அருளும் சூர சம்ஹாரம்

13/11/2018 - செவ்வாய் - முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி பெருவிழாவின் ஆறாம் நாளாகிய இன்று முக்கிய நிகழ்வாகிய "சூர சம்ஹாரம்" நடைபெற உள்ளது. தேவர்களுக்கு மட்டும் அல்லாது உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பல துன்பங்களை விளைவித்த சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த இந்த  திவ்ய தலத்தில் விழாவினை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார்.

தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமான் கருணையே வடிவானவர், பகைவர்க்கும் அருளும் பண்பு கொண்டவர். சிங்காரவேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார் ஆனால் முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை அதனால் வீரபாகுவை தூது அனுப்பினார், தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் ஆனால் தன் ஆணவத்தால் கண்கள் மறைக்கப்பட்ட சூரன் போரில் அனைத்து படைகளையும் இழந்து இறுதியில் மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான். கடலில் சென்று பெரிய மாமரமாக நின்றான்அதனால் முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவி அம்மாமரத்தை இருகூறாகச் சிதைத்தார். அந்த மரத்தை ஒருபாதியை மயிலாகவும் மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார்.

சூரசம்காரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் அல்ல, உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார் எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும் அதனால்தான் சூரபத்மனை சம்ஹாரம் செய்தாலும்கூட அவனையே தனக்குரிய மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆட்கொண்டு அருளினார். மனதில் இருக்கும் ஆணவத்தையும் அசுர எண்ணங்களையும் விடுத்து நல்ல எண்ணத்தோடு வாழவேண்டும் முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார் இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது,  முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக் கட்டிக்கொண்டு சஷ்டி மண்டபத்தில் விரதம் தொடங்குவார்கள். ஆறுநாட்களில் சஷ்டி விரதம் சூரசம்காரம் ஏழாம் நாளில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் அடுத்த நாட்களில் பட்டிண பிரவேசம், ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும், 19/11/2018 அன்று ஜெயந்திநாதர் சூரனை சம்காரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார் அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர் சாயா’ என்றால் நிழல்’ எனப்பொருள் போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்க நடக்கும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம் அதன்பின்பு சுவாமி தன் சன்னதிக்கு திரும்புகிறார் அத்துடன் சூரசம்காரம் நிறைவடைகிறது. 

-சரவண குமார்